

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டம். படம்: ம.பிரபு
சென்னை: "முதுகில் குத்தும் காங்கிரஸுடன் இணைந்து திமுக எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காது’’ என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
எஸ்ஐஆர் தொடங்கப்பட்டதில் இருந்து அதற்கு எதிராக அழுத்தமான குரலை எழுப்பி வருவது திமுகதான். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்காக ஜனநாயக சக்திகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குக் திமுக முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், முதுகில் குத்தும் காங்கிரஸுடன் இணைந்து திமுக எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காது.
ஞானேஷ் குமார், எஸ்ஐஆருக்குஎதிராக மாணவர்கள், இளைஞர்கள்நடத்தும் போராட்டம் மாபெரும் எழுச்சியை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டு அரண்டு போயுள்ள காங்கிரஸ் கட்சி, வேறு வழியில்லாமல் அவர்களது போராட்டத்தில் இணைந்து ஆதரிப்பதாக காட்டிக்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அடுத்தவர் உழைப்பைத் திருடித் தின்பதும், பிறர் முதுகில் சவாரி செய்துவிட்டு முதுகில் குத்துவதும் காங்கிரஸ் கட்சியின் பிறவிக் குணம்.
எஸ்ஐஆரால் தவறுகள் நடந்திருக்கின்றன என்றால் அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடு என மாற்றுவது இரட்டை வேடமே. குறிப்பாகத் தமிழகத்தில் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டதொகுதிகளில் எல்லாம் தவெக வெற்றி பெற்றுள்ள செய்திகள் புள்ளி விவரங்களுடன் வெளியான பின்னரும், தமிழகத்தின் எல்லாம் சரியாக நடைபெற்றுள்ளது என அவர்கள் கூறி வருவது பச்சையான சந்தர்ப்பவாதம்.
தவெக தலைவர் விஜய் இதுவரை எஸ்ஐஆர், ஞானேஷ் குமார் பதவிநீக்குவது குறித்துப் பேச மறுப்பது, தேர்தல் ஆணையம் நியமித்த தலைமைச் செயலாளருக்குத் தவெக அரசில் பணி நீட்டிப்பு வழங்கப்படுவது, தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் திரைமறைவில் நடைபெறும் நேர்மையற்ற ‘திருட்டு அரசியல்’ காரணமாகத்தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும்.
எஸ்ஐஆர் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளர் பட்டியலைக் கொண்டே இனிவரும் தேர்தல்களை நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் திமுக எம்பிக்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.