

சென்னை: “தமிழகத்தில் அரசுகள் மாறிக்கொண்டிருந்தன, ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியும், இங்கிருக்கும் மக்களுக்கு சேவை புரியும் என் மன உறுதியும் எப்போதும் மாறவில்லை. இன்று இதே உறுதிப்பாட்டுடன் முதல்வர் விஜய்யோடு இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறேன்” என பிரதமர் மோடி கூறினார்.
சென்னையில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று நமது நாட்டுக்கும், தமிழகத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இன்று தொடங்கிவைக்கும் திட்டங்கள் தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இன்றிலிருந்து நவராத்திரியின் புனித காலம் தொடங்குகிறது.
இன்றைய புனித நாளில் சிவனோடு சக்திபீடம் கொண்டுள்ள தமிழகத்தில் இருக்கிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
சற்று முன்னர் சென்னை ஐஐடியில் உள்ள மூளை ஆய்வு மையம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வு, பொது சுகாதாரத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். அதேபோல சென்னை மெட்ரோவில் மேலும் ஒரு விரிவாக்கத்தை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
பாரதம் அறிவியல் வளர்ச்சியால் முன்னேறுகிறது, நவீன உள்கட்டமைப்புகள் வாயிலாக புதிய வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக அரசாங்கத்தின் முன்னவர் என்ற வகையிலே எனது 25 ஆண்டுகால மகத்துவமான பயணம் நிறைவடைந்தது. அக்டோபர் 2001-ம் ஆண்டில் நான் முதல்வராக பதவியேற்றேன்.
அப்போதிலிருந்து முதல்வராகவும், பிரதமராகவும் பணியாற்ற வாய்ப்பளித்தார்கள். இந்த 25 ஆண்டு காலகட்டத்தில் நாட்டு மக்கள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி என்ற ஜனநாயகத்தின் இரு சக்திகள் மீதான நம்பிக்கை பலப்பட்டு வந்துள்ளது. நான் எப்போதும் மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் முன்னேற்றம் என்ற மந்திரத்தை மனதில் தாங்கிப் பயணித்து வந்துள்ளேன்.
நான் முதல்வராக இருந்தபோது கருணாநிதி, ஜெயலலிதாவோடு பலமுறை உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பிரதமரான பின்னர் ஜெயலலிதா, ஓபிஎஸ், பழனிசாமி, ஸ்டாலின் போன்றோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அரசுகள் மாறிக்கொண்டிருந்தன, ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியும், இங்கிருக்கும் மக்களுக்கு சேவை புரியும் என் மன உறுதியும் எப்போதும் மாறவில்லை. இன்று இதே உறுதிப்பாட்டுடன் முதல்வர் விஜய்யோடு இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறேன்.
சிறப்பான நகரமைப்புக்கு சாலைகளை அகலப்படுத்துவது மட்டுமே போதுமானதல்ல. அதனால் மெட்ரோ வலைப்பின்னலை நாட்டில் அதிகப்படுத்தியுள்ளோம். 2014-ல் இந்தியாவில் 5 நகரங்களில் மட்டும் மெட்ரோ சேவை இருந்தது, இப்போது 25 நகரங்களில் மெட்ரோ சேவை செயல்படுகிறது. 2014-ல் 250 கி.மீக்கு மட்டும் மெட்ரோ சேவை இருந்தது, இப்போது 1,100 கி.மீக்கு மெட்ரோ சேவை இயங்குகிறது.
இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் கனவுகளின் பாதையை உருவாக்க இருக்கிறது. தொடர்ந்து பயணித்து சிகரத்தை தொடும் தமிழகத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
இதற்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். இதற்காக நாங்கள் கச்சைக்கட்டிக் கொண்டு பணியாற்ற இருக்கிறோம். தமிழக மக்களின் உழைப்பும், ஆற்றலும் தேசத்தின் எதிர்காலத்திற்கு திசையளிப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். வளர்ச்சியடைந்த தமிழகத்தில் இருந்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க என் வாழ்த்துகள்” என்றார்.