

மதுரை: ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் மிக விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் அமைப்பு சார்பில்வைகை ஆற்றைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டோருக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை விருதுகளை வழங்கிப் பேசியதாவது: மதுரை வைகை ஆற்றில் ஆக.3-ல் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம் உள்பட33 ஏக்கர் பகுதியைச் சுத்தம் செய்துள்ளோம். இப்பணியில் 163 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசியலை, புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வீ த லீடர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் 10.17 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அமைப்புதொடங்கி 105-வது நாளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. அரசியல் குப்பையையும் அகற்றும் காலம் வந்துள்ளது.
ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிப்பதாக சோழவந்தான் எம்எல்ஏ பேசியுள்ளார்.அந்த நேரத்தில் பேரவையில் இருந்த முதல்வர், தவெக எம்எல்ஏ பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்திருக்க வேண்டும். நமது மொழியை உயர்த்திப்பிடிக்க வேண்டும். அதற்காக இன்னொரு மொழி படிக்க வேண்டாம் என கூறக் கூடாது.
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு ‘பாஸ்’ களை பிளாக்கில் சினிமா டிக்கெட் விற்பது போல் விற்றுள்ளனர். விஐபிகள் மட்டுமே குடமுழுக்கைப் பார்த்தனர்.
பொதுமக்களை அனுமதிக்கவில்லை. கோயிலின் மாட வீதிகள் விஐபிகளின் வாகனங்களை நிறுத்தவா உள்ளது. 4 பேருக்கு மட்டுமே தீர்த்தம் தெளித்தனர். மற்றவர்களின் மேல் தண்ணீர்தான் தெளிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டிய போலீஸாரை பொதுமக்கள் மீது தண்ணீர் தெளிக்கப் பயன்படுத்தி உள்ளனர்.
கோயிலில் செல்போன் தடை நியாயம் அல்ல. இப்படிச் செய்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையும். இதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது நாம் தான். சட்டப்பேரவையில் எதை எதையோ பேசுகிறார்கள். பேச வேண்டியதை பேசுவதில்லை.
பெரியாரை முழுமையாக ஏற்கவில்லை. பெண் விடுதலை, சாதி ஒழிப்பை ஏற்கிறோம். கடவுள் மறுப்புக் கொள்கை, பிராமணர்கள் எதிர்ப்பை ஏற்கவில்லை. நாம் ஆட்சிக்கு வரும்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்புள்ள கடவுள் மறுப்பு கல்வெட்டு அகற்றப்படும். இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறுவது உறுதி.
முதல்வர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கக் கூடாது. அது பழைய காலத்து அரசியல். இங்கிலாந்து நாட்டில் பணமே இல்லை. அங்கு ஒரு சதவீத வளர்ச்சிதான் உள்ளது. அங்கிருந்து எப்படி முதலீடு வரும். தமிழக முதல்வர் கோவைக்கும், மதுரைக்கும் வந்து தொழிலதிபர்களிடம் பேசி சலுகைகள் தருவதாக தெரிவித்து தொழில்களை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யுமாறு கூற வேண்டும்.
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும். நாளை நாம் ஆட்சிக்கு வந்தாலும் ஓராண்டு அவகாசம் வேண்டும். வீ த லீடர்ஸ் இயக்கத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 30 ஆயிரம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.