

“தமிழக மக்களிடம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைக்க வேண்டும்” என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதி பங்கீடும், நமது கட்சியின் விருப்பமனு நேர்காணலும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சி மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது.
இதற்கு துணைநின்ற தோழமைக் கட்சிகளின் பங்களிப்பை உணர்ந்தே தொகுதிப் பங்கீடு ஜனநாயகபூர்வமாக நடைபெற்றது. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்துள்ளதால், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்களிடம் தற்போதைய அரசியல் சூழலை நானே நேரில் விளக்கினேன். அவர்களும் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
கூட்டணியின் வெற்றியே முதன்மையானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்துத் தோழமை தலைவர்களும் அளித்த ஆதரவு நமது கூட்டணியின் வலிமையை காட்டுகிறது. சமூகநீதி மற்றும் மாநில உரிமைகளை அடிப்படையாக கொண்ட நமது கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என ஏங்கிய பாஜக உள்ளிட்ட சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியாகின. எனவே, திசைதிருப்பும் வதந்திகளை புறக்கணித்துவிட்டு தொண்டர்கள் களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக மக்களிடம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைக்க வேண்டும். நமது கூட்டணியில், தோழமைக் கட்சிகள் தத்தம் சொந்த சின்னங்களில் போட்டியிடும் இடங்கள் போக, திமுக வேட்பாளர்கள் மற்றும் நமது சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 175 இடங்களில் 'உதயசூரியன்' களம் காண்கிறது.
உதயசூரியன் மட்டுமல்ல, கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகிய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடையதுதான். தமிழகத்தை வஞ்சிக்கும் மதவாத அரசியலையும், துரோகத்தையும் வீழ்த்தி, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது ஆட்சி தொடரவும், ஜனநாயகத்தைக் காக்கவும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அயராது பணியாற்றி வெற்றியை பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.