

ஆண்டிபட்டி: வைகை அணையில் கிருதுமால் நதிக்கு நிறுத்தப்பட்ட நீர் இன்று (டிச.9) மீண்டும் திறக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி தேவைக்காக வைகை அணையில் இருந்து கடந்த 5ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 650 கனஅடி நீர் தொடர்ந்து டிச.12ம் தேதி வரை வெளியேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கூட்டாற்றில் ராஜ்குமார் (32) என்ற கூலி தொழிலாளி ஆற்றில் சிக்கி உயிரிழந்தார். இவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் நேற்று வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்காக வெளியேற்றப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இறந்தவரின் உடல் மீட்கப்பட்டதால் அணையில் இருந்து நிறுத்தப்பட்ட நீர் மீண்டும் இன்று (டிச.9) முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்படி கிருதுமால் நதிக்காக விநாடிக்கு 650 கனஅடி, திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக கால்வாய் வழியே 700 கனஅடி, குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடிநீர் என மொத்தம் ஆயிரத்து 419 கனஅடி நீர் தற்போது அணையில் இருந்து சென்று கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 64.21 அடியாகவும் (மொத்த உயரம் 71), நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 565 கனஅடியாகவும் உள்ளது.