கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.யில் தண்ணீர் தட்டுப்பாடு - விடுதி மாணவிகளுக்கு 12 நாள் விடுமுறை

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.யில் தண்ணீர் தட்டுப்பாடு - விடுதி மாணவிகளுக்கு 12 நாள் விடுமுறை
Updated on
1 min read

பழநி: கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் குடிநீர் மற்றும் குடிநீர் பயன்பாடு அல்லாத தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மாணவிகள், பேராசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே, விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், பெரும்பாலான மாணவிகள் பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் குடிநீர் மற்றும் குடிநீர் பயன்பாடு அல்லாத தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மாணவிகள், பேராசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது பல்கலை. வளாகத்தில் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்று வருவதால் வெளி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் வேறு வழியின்றி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு இன்று (ஆக.5) முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 12 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தினமும் வீடுகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேவைக்கேற்ப லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளின் கல்வி பாதிக்காமல் இருக்க தண்ணீர் தேவையை உடனே பூர்த்தி செய்ய தீவிர நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் களம் இறங்கியுள்ளது.

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.யில் தண்ணீர் தட்டுப்பாடு - விடுதி மாணவிகளுக்கு 12 நாள் விடுமுறை
“ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது ஆபத்து” - அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in