

ஆலோசனை கூட்டத்தில் பேசிய பசுபதி
விழுப்புரம்: விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, நகர செயலாளர் பசுபதி, வழக்கறிஞர் ராதிகா உள்ளிட்டோர் முயற்சித்தனர். இதில் சி.வி.சண்முகம் எம்.பியின் விசுவாசியான சுரேஷ்பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பசுபதி, தனது ஆதரவாளர்களுடன் விழுப்புரத்தில் நேற்று ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விழுப்புரம் தொகுதியில், நான்தான் போட்டியிடுகிறேன் என ஒருவர் கூறி வருகிறார். இந்த வேட்பாளர்யார் என்று அனைவருக்கும் தெரியும். அவரை மாற்ற வேண்டும். அவர் போட்டியிட்டால் விழுப்புரத்தில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோகும். விழுப்புரத்தில் கடந்த தேர்தலில், சி.வி.சண்முகம் தோல்வி அடைந்ததால் வேறு யாரும் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக வேட்பாளரை தேர்வு செய்துள்ளார்.
விழுப்புரம் மக்களவை தொகு தியில் விசிக போட்டியிட்டதால் பட்டியலின மக்கள் அனைவரும் விசிகவுக்குதான் வாக்களிப்பர் என அதிமுக வேட்பாளரிடம் சி.வி.சண்முகம் கூறினார். இப்போது இதேபோல், விழுப்புரத்தில் வன்னியர் போட்டியிட்டால் தோல்வி அடைந்துவிடுவார் என தேர்தலில் வாய்ப்பு கேட்ட என்னிடமும் கூறுகிறார்.
விழுப்புரம் தொகுதியில் கடந்த 2011, 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் அமைச்சர் பதவியில் இருந்தும், தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. இதனால்தான் 2021-ல் திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் தோற்று போனார். ஆனால் நாங்கள் தோற்கடித்துவிட்டதாக கூறினார். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரை மாற்ற வேண்டும். கட்சி ரீதியாக மாவட்டத்தை பிரிக்க வேண்டும்.
மாபியா கும்பல் போல் செயல்பட்டு தலைமையை அச்சுறுத்தி வருகிறார். அடுத்த ஓபிஎஸ் போல் சி.வி.சண்முகம் வருவார். அவரது சகோதரர், கட்சியினரை ஒருமையில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும், விழுப்புரத்தை ஒப்படைத்து விடலாம் என கணக்கு போட்டிருந்தார். இப்போது முடிவு செய்துள்ள வேட்பாளருக்கு தேர்தலில் யாரும் பணிசெய்ய மாட்டார்கள். சமுதாயத்தின் அடிப்படையில் எதிர்க்கவில்லை.
வெற்றி பெறும் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். என்னை நானே, சொல்லிக் கொள்ளக் கூடாது. அவரவர் மனசாட்சிக்கு தெரியும். தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். பொது தொகுதியில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்பது அவரது திட்டம். கடந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற இரு தொகுதிகளும் தனி தொகுதிகளாகும். எங்கள் குறைகளை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் நாளை (இன்று) தெரிவிக்க உள்ளோம். அதிமுகவில் இருந்து விலகமாட்டேன்” என்றார்.
யார் இந்த பசுபதி?
விழுப்புரம் தொகுதியில் 2001-ல் பாமக சார்பில் போட்டியிட்டு சொற்ப எண்ணிக்கையில் பொன்முடியிடம் பசுபதி தோல்வியை தழுவினார். பின்னர் 2004 மக்களவை தேர்தலில் போட்டியிட பாமக தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என கூறி அதிமுகவில் இணைந்தவர், விழுப்புரம் காந்தி சிலை அருகே மாவட்ட பாமக அலுவலகத்தில் அதிமுக கட்சி கொடிகளை கட்டி கைப்பற்றினார்.
அதன்பிறகு 2006-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு பொன்முடியிடம் மீண்டும் தோல்வி அடைந்தார். அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு காய்களை நகர்த்தியதால் அவர் மீதான சி.வி.சண்முகத்தின் கோபம் கடந்த 16 ஆண்டுகளை கடந்தும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.