“மேற்காசிய போர் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க பிரதமர் தயாரா?” - ஸ்டாலின் கேள்வி

“மேற்காசிய போர் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க பிரதமர் தயாரா?” - ஸ்டாலின் கேள்வி

படம்: முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்திலிருந்து..

Updated on
1 min read

சென்னை: மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கரோனா பெருந்தொற்றுக்கு தயாரானது போல மேற்கு ஆசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருக்கிறார். தயார்நிலையை மக்களிடம் ஒப்படைக்க முடியாது. எதற்குத் தயாராக வேண்டும் - தலைமைக்கா அல்லது தலைமை இல்லாத நிலைக்கா?, தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?

போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, கடந்த 11-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதினேன். அதில், அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன்.

நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த மார்ச் 12-ம் தேதி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின.

தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல் மார்ச் 14-ம் தேதி பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம், MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன், தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை, உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தோம்.

அப்போதே, மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? என்று கேட்டேன். அப்போதும் பதில் இல்லை.

மார்ச் 15ம் தேதி, தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.

மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவில் தெரிவித்திருக்கிறார்.

“மேற்காசிய போர் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க பிரதமர் தயாரா?” - ஸ்டாலின் கேள்வி
“டெல்லியில் முடிவான ஒப்பந்தத்தை சொல்லும் வெறும் ‘அறிவிப்பாளர்’ பழனிசாமி” - திமுக விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in