

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்
புதுச்சேரி: “புதுச்சேரியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் ரூ.290-ல் இருந்து ரூ.424-ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை இந்தியா தினவிழா கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினர்.
மேலும், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கையேட்டையும் வெளியிட்டார். இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவகொழுந்து, செல்வகணபதி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் வராமல் இருப்பதற்கு நாம் சுத்தமாக இருப்பது அவசியம். நோய்க்கு அடிப்படை காரணம், சுகாதாரமற்ற நிலை என்பதே உண்மை. நம்முடைய வீடு, இடங்கள், நகரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுகுறித்து மாணவர்கள் மூலமாக மற்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமான ஒன்று.
இதன் அடிப்படையில் உள்ளாட்சி துறை மூலம் ஒரு மாத காலத்துக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை நம்முடைய மாநிலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் சுத்தம் செய்யும் பணியை விட்டுள்ளோம். அவர்கள் முழு கவனத்தோடு பணியை மேற்கொண்டு புதுச்சேரியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது.
ஒப்பந்த அடிப்படையில் பணிகள் விடப்பட்டுள்ள போது, தேவையான எண்ணிக்கையில் எத்தனை பேர் பணியில் அமர்த்தப்பட வேண்டும். எப்படி பணியை செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்தியுள்ளபடி அவர்கள் பணியை செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிக்கான தொகை எவ்வளவு இருந்தாலும், அதனை அரசு கொடுத்து விடுகிறது. அவர்கள் சரியான முறையில் பணியை மேற்கொண்டால் நிச்சயமாக எல்லோரும் பாராட்டும் அளவுக்கு புதுச்சேரி இருக்கும்.
சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் புதுச்சேரியை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். எனவே, உள்ளாட்சித்துறை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறேன். அந்த பணியில் உள்ளாட்சித் துறையும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியை எடுத்த ஒப்பந்ததாரர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நேரங்களில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை பணிக்கு எடுக்கக்கூடாது என்று சொல்வோம். ஆனால், தூய்மை பணியில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் ஈடுபட்டிருப்பார்கள்.
அவர்களுக்கு எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை நம்மால் எண்ணி பார்க்க முடிகிறது. இருப்பினும், ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்போது, என்னென்ன நிபந்தனைகள் இருந்ததோ, அதன்படி பணியில் சரியான நபர்களை அமர்த்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் நோய் வராமல் தடுப்பதற்கான சிகிச்சை அளிப்பதிலும் ஒப்பந்ததாரர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள அடிப்படை ஊதியத்தை வழங்குவதிலும் அரசு கவனம் செலுத்தும். ஜூன் மாதம் முதல் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் வழங்கி வந்த ஊதியம் ரூ.290-ல் இருந்து ரூ.424 ஆக உயர்த்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும்.” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.