

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத்திட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.7,376 ஆக உயர்த்தி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணைகளை வழங்கினார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத்திட்டபகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியத்தை ரூ.1,500-ல் இருந்து ரூ.7,376 ஆக உயர்த்தி, அதற்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 2002-ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 என்று இருந்தது. 4 ஆண்டுகள்தொடர்ச்சியாக பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.1,000 என்று உயர்த்தப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.1,500 என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலங்களில் 938 பேர் தற்காலிக பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு அந்தந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ரூ.27,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 1,575 பேருக்கு தற்போது ஊதியம் உயர்த்தி வழங்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் பணியிடங்கள் காலியாகும் போது, அவர்களின் கல்வித் தகுதிப்படி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தேர்ந்தெடுத்து பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.