

டெல்லியில் சிபிஐ விசாரணை முடிந்து வெளியே வந்த தவெக தலைவர் விஜய். படம்: பிடிஐ
சென்னை: டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அவர் ஆஜரானார். காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. கூட்ட நெரிசல் தொடர்பாக அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
குறிப்பாக, கூட்டம் கட்டுக்கடங்காமல் போன பிறகும் ஏன் உரையைத் தொடர்ந்தீர்கள், தாமதத்துக்கு திட்டமிட்ட காரணம் எதுவும் உண்டா, தாமதமாகும் தகவலை மக்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை, போலீஸார் கொடுத்த பாதுகாப்பு வழிமுறைகள் மீறப்பட்டதா என்பது உட்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். அதற்கு விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
‘காவல் துறை வழங்கிய அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றினேன். ஆனால், கூட்டத்தைகட்டுப்படுத்த போதிய அளவில் போலீஸார் நியமிக்கவில்லை’ என்று விஜய் கூறியதாக தெரிகிறது. சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க விஜய் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படலாம் என்றும் தெரிகிறது. விசாரணை மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் அங்கிருந்து விஜய் புறப்பட்டார்.
பிப்ரவரியில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிடிஆர் நிர்மல்குமார் டெல்லியில் கூறும்போது, விஜய்யிடம் விசாரணை முடிந்தது.
இனி சம்மன் எதுவும் இல்லை. அவரது பிரச்சாரம் திட்டம் தொடர்பான தகவல் களை சிபிஐ கேட்டு தெரிந்து கொண்டது. குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் இடம்பெறுவது, கைது என ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறு. இவை அனைத்தும் திமுகவால் பரப்பப்படும் வதந்தி’’ என்றார்.