“விஜய் கைகோத்தால் பாஜகவின் செல்வாக்கு உயரும்!” - மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை | நேர்காணல்
தமிழக அரசியலில் ஐம்பதாண்டு கால அனுபவம் கொண்டவர் வி.பி. துரைசாமி. சட்டப் பேரவைத் துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல உயரிய பொறுப்புகளை வகித்தவர். திராவிட அரசியலின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். தற்போது தமிழக பாஜக-வின் மாநிலத் துணைத் தலைவராக உள்ள அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசியதிலிருந்து...
அதிமுக, திமுக, இப்போது பாஜக என மூன்று முக்கிய கட்சிகளில் முக்கியமான இடங்களை பிடித்த நீங்கள், நீண்ட அரசியல் பயணத்தில் கற்றுக் கொண்ட மிக முக்கியமான பாடம் எது?
அரசியல் என்பது ஒரு நெடும் பயணம். இங்கே திறமையை விடவும், உழைப்பை விடவும் நிதானம் தான் ஒருவரை நிலைநிறுத்துகிறது. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் உழைப்பை வீணடித்துவிடும். எனவே, சரியான தருணம் வரும் வரை பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்பதுதான் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம்.
திமுக-வில் சாதிப் பாகுபாடு உள்ளதாக அங்கிருந்து விலகும் போது சொன்னீர்களே... இன்னும் அதே நிலை தொடர்கிறதா?
இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதை மாற்ற ஸ்டாலின் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமைச்சர்கள் சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரை அமைச்சரவை வரிசை மற்றும் மேடைப் புரோட்டோகால் அடிப்படையில் 10, 11, 12 ஆகிய முன்னிடங்களுக்கு கொண்டு வந்ததாகக் கூறினாலும், நடைமுறையில் அவர்களை முதல்வர் ஸ்டாலின் கடைசி இடத்திலேயே அமர வைத்துள்ளார்.
ஸ்டாலின் பிறவியிலேயே எம்எல்ஏ வாரிசாக வளர்ந்தவர் என்பதால், அடித்தட்டு மக்களின் உணர்வுகளையோ, அவர்களின் கடின உழைப்பையோ, உண்மையான விசுவாசத்தையோ புரிந்துகொள்ள அவருக்குத் தெரியவில்லை.
திமுக-வின் ‘திராவிட மாடலை’ கடுமையாக எதிர்க்கும் நீங்கள், கருணாநிதியுடன் இருக்கையில் அதை ஏற்றுக்கொண்டு தானே இருந்தீர்கள்..?
தற்போதைய அரசை 'திமுக அரசு' என்று வெளிப்படையாகச் சொல்வதற்கு ஸ்டாலின் தயங்குகிறார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த கருணாநிதிகூட 'கழக அரசு' என்றே சொன்னார். 'திராவிட மாடல்' என்பது தமிழில் இல்லாத ஒரு வார்த்தை. இது ஒரு கட்சி ஆட்சிதான்; கூட்டணி ஆட்சி அல்ல. அப்படி இருந்தும் ‘திமுக அரசு' என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்குத் துணிச்சல் இல்லை.
பாஜக-வில் உங்களுக்கு வழங்கப்பட்ட மாநிலத் துணைத் தலைவர் பதவி என்பதுபெயரளவுக்கான பதவியாக சுருக்கப்பட்டுவிட்டதோ?
பாஜக-வில் தொடர்ந்து 6 ஆண்டுகாலம் மாநில துணை தலைவர் பதவியும், மையக்குழு உறுப்பினர் பதவியும் வகித்து வருகிறேன். என்னுடைய இடத்தில் இருந்து எனது கருத்தை நான் வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறேன். அவர்களும், ஏற்றுக்கொள்கிறார்கள். எனக்கு உரிய மரியாதையை வழங்குகிறார்கள். அனைத்திலும் என்னை முன்னிலைப்படுத்துவதிலும் பாஜக மிகவும் ஆர்வம் காட்டுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதித்துறைக்கும் திமுக அரசுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு குறித்து..?
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் சமூகம் மற்றும் தீர்ப்பைக் குறித்து பொதுமேடைகளில் கொச்சைப்படுத்திப் பேசுவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவசரப்பட்டு, ஆவேசப்பட்டு, நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி (இம்பீச்மென்ட்) தனது எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் மனு அளித்தார்.
ஆனால், அந்த நீதிபதியின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்போது உறுதி செய்திருப்பதால் திமுக-வின் இம்பீச்மென்ட் கோரிக்கை அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. நீதித்துறைக்கு எதிராக அவசரப்பட்டு வழக்குத் தொடர்வதும், நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துவதும் திமுகவு-க்கும் அதன் தலைவருக்கும் எதிர்காலத்தில் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்கிறதே அரசு?
அமைச்சர் ரகுபதி, நீதிமன்றத் தீர்ப்பைக் கொச்சைப்படுத்திப் பேசுவது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே. நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து திமுக தொடர்ந்து மேல்முறையீடு செய்வது, மக்கள் மத்தியில் திமுக-வினர் மீதான மரியாதையை குறைத்துவிடும்.
திமுக ஆட்சியில் மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?
மத்திய அரசு, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேவையற்ற வழக்குகளுக்காக மக்களின் வரிப்பணத்தை முதல்வர் ஸ்டாலின் வாரி இறைக்கிறார். தவறான ஆலோசனைகளைக் கேட்டு மக்கள் பணத்தை இப்படி வீணடிப்பது முறையா? ஊழல், அதிகப்படியான கடன் சுமை, தேவையற்ற வழக்குகள் ஆகிய மூன்றிலும் தமிழகத்தை முதலிடத்தில் வைத்திருப்பதே ‘திராவிட மாடல்' ஆட்சியின் லட்சணம்.
சினிமா பிரபல்யத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை மாற்றிவிட முடியுமா?
தமிழக அரசியலில் நீண்ட காலமாகவே திரைத்துறையினரின் ஆதிக்கம் இருக்கிறது. திரைத்துறையில் இருந்து வந்தாலும், எம்ஜிஆர் எம்எல்ஏ-வாகவும், திமுக பொருளாளராகவும் இருந்து அடிமட்ட அரசியலைக் கற்றுக்கொண்டவர். அவரிடம் அரசியல் அடிப்படை இருந்தது. அவருக்கு இருந்த அந்த அரசியல் அனுபவம் மற்ற திரைத்துறை நபர்களுக்கு இல்லை. எனவே, சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரும் மற்றவர்களை எம்ஜிஆருடன் ஒப்பிட முடியாது.
விஜய்யால் தமிழக பாஜக-வின் செல்வாக்கு இறங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்களே..?
விஜய் எங்களுடன் கைகோத்தால் எங்களுடைய செல்வாக்கு உயரும்.
2026 தேர்தலில் களமிறங்கும் திட்டம் இருக்கிறதா?
அரசியலில் ஆசை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது தவறு. எனக்கு தேர்தலில் போட்டியிட ஆசை இருக்கிறது. இருந்தாலும், பாஜக தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.
மத்திய அமைச்சரவையில் சேர்ப்பதற்கு உங்களைப் போன்ற அனுபவசாலிகளை பாஜக ஏன் பரிசீலிப்பதில்லை?
எதிர்காலத்தில் அது நடந்தே தீரும். பாஜக-வை நான் நம்புகிறேன்.
