“தெளிவற்ற அரசியலை செய்கிறது தவெக” - சத்தமாகச் சொல்லும் சசிகாந்த் செந்தில் | நேர்காணல்
ஜம்மு - காஷ்மீரை மத்திய பாஜக அரசு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது, அதை ஏற்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். தற்போது அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவராகவும், திருவள்ளூர் தொகுதி எம்பி-யாகவும் இருக்கும் அவரிடம் 'ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகும் அக்கட்சியில் சேர என்ன காரணம்?
பாஜக-வை எதிர்ப்பதற்கோ பாசிச கொள்கையை அழிப்பதற்கோ இருக்கும் ஒரே கருவி காங்கிரஸ் தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அரசியல் வெற்றி, ஆட்சி, அதிகாரம் என்பதையெல்லாம் தாண்டி பாஜக-வின் பாசிச கொள்கையை, மதவெறியை, வெறுப்பு அரசியலை அழிப்பதே என் நோக்கம். அதற்காகத்தான் காங்கிரஸில் இணைந்தேன்.
மத்திய பாஜக அரசின் தொடர் வெற்றியை தடுக்க உங்களின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
காங்கிரஸில் இணைந்த நாள் முதல் இன்றுவரை எனது பணிகள் அனைத்தும் தேர்தல் சார்ந்த பணிகளாகவே இருந்திருக்கிறது. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பிறகு கர்நாடக தேர்தலிலும் வார் ரூம் அமைத்து தேர்தல் பணிகள் மேற்கொண்டேன். பிறகு, அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் திட்டமிடும் பணிகள் தொடங்கி அனைத்து தேர்தல் பணிகளையும் வழி நடத்தி வருகிறேன். காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் 'சங்கதன் ஸ்ரீஜன் அபியான்' திட்டத்தை தொடங்கி நாடு முழுவதும் செயல்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளேன். இந்தியா வேற்றுமைகளில் ஒற்றுமை கொண்டது என்பதை முழுமையாக நம்புகிறவன் நான். எனவே, அதை அழிக்க நினைக்கும் பாஜக-வை அழித்தொழிப்பதையே முழு நேர பணியாகச் செய்து வருகிறேன்.
அறக்கட்டளைகள் மூலம் தேர்தல் நிதி திரட்டி வரும் பாஜக-வை எதிர்காலத்தில் எளிதில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
அனைத்து அரசியலமைப்பு மற்றும் அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பாஜக-வின் மிகப்பெரிய ஆயுதம். பாசிசத்தின் அமைப்பே இது தான். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக பாஜக-வுக்கு வேலை செய்கிறது. தேர்தலுக்கு நிதி வழங்கக்கூடிய நிறுவனங்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறிப்பதை பாஜக செய்து வருகிறது. தங்களுக்கு ஏற்றார் போல எல்லா திட்டங்களையும் மாற்றுவது தான் பாஜக பாணி. ஆனால், வெகு காலம் மக்கள் இவர்களை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கமாட்டார்கள். மக்கள் பாஜக-வை எதிர்த்து களத்துக்கு வர தயாராகிவிட்டனர். எனவே, எங்களுக்கு பாஜக-வை வீழ்த்துவது அவ்வளவு கடினம் அல்ல.
ஓட்டுக்குப் பணம் வாங்கிப் பழகிவிட்ட மக்களிடம், அகிம்சை வழியில் நிற்கும் காங்கிரஸால் வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியுமா?
பணம் மக்களை வழி நடத்தாது. தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்போது மக்கள் அதை புரிந்துகொண்டு, எதிர்ப்பார்கள். இல்லையெனில் காங்கிரஸ் மக்களுக்கு அதை புரியவைக்கும். காங்கிரஸுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி மிகச் சிறியது. அதை சரி செய்வோம். மக்களுடன் சேர்ந்து நாங்கள் பாஜக-வை எதிர்த்துப் போராடுவோம். பாஜக-வின் பொய்யும், புரட்டுகளும் மக்களுக்குப் புரியத் தொடங்கி விட்டது. இன்னும் ரொம்ப நாட்களுக்கு பாஜக-வால் மக்களை ஏமாற்ற முடியாது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி மீது உங்களுக்கு ஒரு கண் இருக்கிறதோ..?
அப்படியெல்லாம் எந்தக் கண்ணும் இல்லை. அகில இந்திய அளவில் பல செயல்பாடுகள் எனது தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிக்க வேண்டிய கடமைகள் எனக்கு உள்ளது. இப்போது இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். எத்தனை தலைவர்கள் வந்தாலும் அவர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். கண்டிப்பாக இப்போது எனக்கு அந்த எண்ணம் எதுவும் இல்லை.
பிரவீன் சக்கரவர்த்தி திமுக அரசை விமர்சிப்பது எப்படி உள்கட்சி விவகாரமாகும் என கூட்டணி கட்சிகள் கேட்கின்றனவே?
அவர் சொன்னதை அவருடைய தனிப்பட்ட கருத்தாகத் தான் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியில் என்றைக்குமே உட்கட்சி ஜனநாயகம் இருந்து கொண்டு தான் இருக்கும். அதில் அவரவர் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார்கள். ஆனால், மாநிலத் தலைவர் மற்றும் மேலிட பொறுப்பாளர்கள் சொன்னால் மட்டும்தான் அது அதிகாரபூர்வமான கருத்தாக இருக்கும்.
திமுக-வுடன் தான் கூட்டணி எனச் சொல்லிவிட்டு காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யை சந்திப்பது சரியா?
எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் அதிகாரபூர்வமாக விஜய்யை சந்தித்ததாக நான் எங்கும் பார்க்கவில்லை. யாரேனும் தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தால், அதற்கு காங்கிரஸ் பெறுப்பேற்காது. ஏற்கெனவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கென, தலைமையில் இருந்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தான் கூட்டணி சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும். காங்கிரஸ் - திமுக கூட்டணி என்பது தெளிவான சித்தாந்த ரீதியான கூட்டணி.
இந்தத் தேர்தலில் தவெக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
தவெக-வால் இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. குறைந்த சதவீத வாக்குகளே அவர்களால் பெற முடியும். தங்களது கொள்கை, செயல்பாடுகளில் ஒரு தெளிவற்ற அரசியலை அவர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி னாலும் அது இண்டியா கூட்டணியின் வெற்றிக்கான ஒரு தாக்கமாகத்தான் இருக்கும்.
இந்தத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை விட பூஜ்ஜியம் என்று சொல்லலாம். பாஜக-வின் வெறுப்பு அரசியல் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். பாஜக தமிழகத்தில் என்ன சதி வேலை செய்ய நினைக்கிறது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இப்படிப்பட்ட பாஜக-வுடன்கூட்டணி வைக்கும் எந்தக்கட்சியையும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்தக் கூட்டணி வரலாறு காணாத தோல்வியைத் தழுவும்.
