

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் ஆய்வு செய்தார்.படம்; ம.பிரபு
சென்னை: சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததாக, காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். முன்னதாக, சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அவர்களுடன் சட்டம் - ஒழுங்கு மற்றும் இதர பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முதலில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் வாக்காளர்களிடம் சென்று ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் பாதுகாப்பு திருப்தியாக உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சவுகார்பேட்டையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் வைக்கப்பட உள்ள ராணிமேரி கல்லூரிக்குச் சென்று பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், அவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீஸார் என 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தேன். வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.