

சென்னையில் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள போலீஸார், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 300 கம்பெனி துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை நந்தனத்தில் தவெக தலைவர் விஜய், ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி, சென்னை எழும்பூரில் சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், காரைக்குடியில் நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் ஜி.கே.வாசன் ஆகியோர் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அந்த நேரத்தில் இருந்து நாளை வாக்குப்பதிவு நிறைவடையும் மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்தை அமைதி காலமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அமைதி காலத்தில் தேர்தல் தொடர்பான எந்தப் பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்த கூடாது. எந்தத் தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர், அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுதும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் நேற்று மாலை முதலே போலீஸார் தீவிர சோதனை நடத்தி,தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த 48 மணி நேர அமைதி காலத்தை மதுவிலக்கு நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனால் நேற்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகள், மதுக்கூடங்களை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 83,875 காவல் துறை பணியாளர்கள், 40,427 காவல் துறை அல்லாத பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடி பணியில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 15-ம் தேதியில் இருந்து, தலா 2,106 பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் நடத்திய சோதனையில் நேற்று வரை சுமார் ரூ.1,200 கோடிக்கு மேல் ரொக்கம், மதுபானங்கள், தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இத்தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் 136 பொது பார்வையாளர்கள், 50 காவல் பார்வையாளர்கள் மற்றும் 150 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணி முதல் இறுதிகட்ட பயிற்சியும், வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பலத்த பாதுகாப்புடன் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பும் பணி தொடங்குகிறது. வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
12 ஆவணங்கள்: வாக்காளர் அட்டை இல்லாவிட்டால் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, இந்தியக் கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்கு எண்ணிக்கை: வாக்குப் பதிவு நிறைவடைந்த பின், அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும், பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் ஏப்.29-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பின், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போது, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.