புதுச்சேரி தேர்தல்: 4 பிராந்தியங்களில் 6 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை மையங்களில்  ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுதாகர்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுதாகர்.

Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பிராந்தியங்களில் பலத்த பாதுகாப்புடன் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை (மே.4) காலை தொடங்குகிறது. காலை 11 மணி முதல் முடிவுகள் தெரியும். ஆட்சியை பிடிப்பது யார் என்பது பிற்பகலில் தெரியவரும்.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்தது. எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். இத்தேர்தலில் 294 பேர் 30 தொகுதிகளில் போட்டியிட்டனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் வரலாறு காணாத வகையில் 89.87 சதம் வாக்குப் பதிவானது. மேலும், இதுவரையில் பதிவான 12,936 தபால் வாக்குகளையும் சேர்த்தால் 91.23 சதம் வாக்குகள் இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுவையின் 4 பிராந்தியங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. புதுவையில் 23 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, தாகூர் கலைக்கல்லுாரி, நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாஹேவில் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் அரசு கலைக்கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதுவையில் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 166 டேபிள்களும், தபால் வாக்குளை எண்ணுவதற்கு 35 டேபிள்கள் என மொத்தம் 201 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 265 கண்காணிப்பாளர்கள், 315 உதவியாளர்கள், 279 பார்வையாளர்கள் என மொத்தம் 859 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

காலை 6.30 மணிக்கு பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர் முன்னிலையில் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரப்படுகிறது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி 8 மணிக்கு தொடங்குகிறது. 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 7 முதல் 14 வரை எண்ணிக்கை மேசைகள் ஒதுக்கப்படுகின்றன.

முதல்சுற்றாக மண்ணாடிப்பட்டு, ஊசுடு, வில்லியனுார், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, நிரவி திருபட்டினம், மாஹே, ஏனாம் ஆகிய 17 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த 17 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடியும் நேரம் குறித்து தேர்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக மதியம் ஒரு மணிக்கு இந்த 17 தொகுதிகளின் முழுமையான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இதைத்தொடர்ந்து 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 2வது சுற்றில் திருபுவனை, மங்கலம், உழவர்கரை, இந்திராநகர், காமராஜர் நகர், காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 13 தொகுதிகளின் எண்ணிக்கை நடக்கிறது. 2வது சுற்றின் வாக்கு எண்ணிக்கை முழு விபரம் மாலை 6 மணிக்கு தெரியவரும். முதல் 17 தொகுதிகளில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைப்பதற்கான முன்னிலை விபரம் தெரியவரும்.

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு, நகரம், புறநகர், கிராமப்புறங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். வெற்றி கொண்டாட்டத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாதவகையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக புதுவையின் 4 பிராந்தியங்களிலும் 2 ஆயிரத்து 600 போலீஸார் பாதுகாப்பு பணியிலும், அவர்களுக்கு உதவியாக 500 துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்கப்பதிவு இயந்திரங்கள் ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் வரை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>வாக்கு எண்ணிக்கை மையங்களில்  ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுதாகர்.</p></div>
புதுச்சேரி நெகிழ்ச்சி: நீட் தேர்வுக்கு பழைய ஹால் டிக்கெட்டோடு வந்த மாணவி - உதவிய போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in