புதுச்சேரி நெகிழ்ச்சி: நீட் தேர்வுக்கு பழைய ஹால் டிக்கெட்டோடு வந்த மாணவி - உதவிய போலீஸார்

புதுச்சேரி நெகிழ்ச்சி: நீட் தேர்வுக்கு பழைய ஹால் டிக்கெட்டோடு வந்த மாணவி - உதவிய  போலீஸார்
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் நீட் தேர்வின்போது பழைய ஹால் டிக்கெட் எடுத்து வந்த மாணவியை சமாதானப்படுத்தி, அவரது தந்தையை புதிய ஹால்டிக்கெட்டை எடுத்து வரச் செய்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உதவினர். அதேபோல் மற்றொரு இடத்தில் நேரமானதால் தேர்வு மையத்துக்கு டூவீலரில் மாணவியை பெண்காவலர் அழைத்துச் சென்றார்.

எம்பிபிஎஸ், பல் மருத்துவம் உள்பட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடந்தது. புதுச்சேரி பிராந்தியத்தில் 9 மையங்களில் நடந்த நீட் தேர்வை எழுத 4,440 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது.

அதிகபட்சமாக பல்கலைக்கழகத்தில் 960 பேர், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 720 பேர், ஜிப்மர் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 480, காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 240, நவோதயா வித்யாலயா பள்ளியில் 240, சின்னத்தா அரசு பெண்கள் பள்ளியில் 480, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480, வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் பள்ளியில் 480, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரியில் 360 பேர் என நீட் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வினையொட்டி தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வர்கள் அரை கை கொண்ட வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். முழுக்கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிய அனுமதி இல்லை. ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்க கூடாது.

குறைந்த உயரம் கொண்ட சாதாரண காலணிகளை மட்டுமே அணிந்து இருக்க வேண்டும். இருபாலரும் எக்காரணத்தை கொண்டும் ஷூக்கள் அணிய கூடாது. தேர்வர்கள் காதணிகள், மோதிரங்கள், பதக்கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ, ஆபரணங்களையோ அணிந்து வரக்கூடாது.

மத அல்லது கலாச்சாரரீதியான ஆடைகளை அணிந்து வரும் தேர்வர்கள், முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தேர்வர்கள், தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வர வேண்டும் என்ற அறிவிப்பின்படி பெரும்பாலானோர் நேரத்தோடு வந்தனர்.

பாரதிதாசன் மகளிர் கல்லூரி மையத்துக்கு அப்படி வந்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கனீஷ்கா கடந்த முறை தேர்வு எழுத பயன்படுத்திய ஹால் டிக்கெட்டை எடுத்து வந்து விட்டார். இதனால் அவர் அனுமதிக்கப்படவில்லை. இதனை மாணவி வெளியே வந்து கூறியதைக் கேட்டு, பெண்ணின் தந்தை வீட்டுக்கு விரைந்து சென்றார். அதே நேரத்தில் தேர்வர்களும் காவல்துறையினரும் அவரைச் சமாதானப்படுத்தி தேர்வு மைய வளாகத்தில் காத்திருக்க வைத்திருந்தனர். மதியம் 1:30 ஆனதைத் தொடர்ந்து தேர்வு அதிகாரிகள் மதியம் 1:30 ஆகிவிட்டது. இனி மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என கூறி கேட்டை மூடினர்.

அதற்குள் தனது தந்தைக்குத் தொலைபேசி மூலம் கனிஷ்கா தொடர்பு கொண்டார். அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கதவை மூடும் கடைசி நேரத்தில் தந்தை ஓடி வந்து மகளிடம் புதிய ஹால் டிக்கெட்டை நீட்ட காவல்துறை அதிகாரிகளும் தேர்வு மைய அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மாணவியைத் தேர்வுக்குச் செல்ல உதவினார்கள். இதனால் பாரதிதாசன் கல்லூரி தேர்வு மையம் அரை மணி நேரத்திற்குப் பரபரப்புடன் காணப்பட்டது.

அதேபோல் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழக நீட் தேர்வு மையத்துக்கு 1.25 மணிக்கு வந்த ஒரு மாணவியை பெண் காவலர் பாக்கியலட்சுமி தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உதவினார்.

புதுச்சேரி நெகிழ்ச்சி: நீட் தேர்வுக்கு பழைய ஹால் டிக்கெட்டோடு வந்த மாணவி - உதவிய  போலீஸார்
வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் விளைவிக்க பாஜக திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in