

மேட்டூர்: மேட்டூரில் விநாயகர் சிலையை கரைக்க வந்த இரு தரப்பை சேர்ந்த இளைஞர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டதில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பல வடிவங்களால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. அதன்படி, மேட்டூர் வட்டத்தில் 5 இடத்திலும், எடப்பாடி அருகே பூலாம்பட்டி, தேவூர் கல்வடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, 3-வது நாளான இன்று விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக மேட்டூருக்கு எடுத்து வந்தனர்.
அப்போது, மேட்டூர் காவேரி பாலம் அருகே லாரிகளில் வந்த பெண்கள் மீது மற்றொரு லாரியில் வந்த ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் மலர்களை தூவி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனை லாரிகளில் வந்த இளைஞர்கள் தட்டி கேட்டனர்.
அப்போது, இரு தரப்பினரை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரண்டு தரப்பை சேர்ந்த 50- கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்தத் தாக்குதலில் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 கி.மீ தூரதுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரண்டு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தரப்பினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியலுக்கு முயன்றனர்.
அப்போது, பாதிக்கப்பட்ட தரப்பினரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் ஆய்வாளர் வாகனத்தை மறித்தும், வாகனத்துக்கு அடியே புகுந்தும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.