

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து போத்தனூர், தென்காசிக்கு சிறப்பு ரயில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
சென்னை எழும்பூரில் இருந்து செப்.12-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (06151) புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து செப்.14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (06152) புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்பும், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை(செப்.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பெங்களூரு- சென்னை:
பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து செப்.11,12 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06587) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.11, 12 ஆகிய தேதிகளில் மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரயில் (06588) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டை அடையும்.
கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து செப்.11-ம் தேதி இரவு 11.35 மணிக்கு சிறப்பு ரயில் (06527) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து செப்.12-ம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06528) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டை அடையும்.
பெங்களூரு கன்டோன்மென்ட் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில், பெங்களூரு கன்டோன்மென்ட் -திருநெல்வேலி இடையே சிறப்புரயில் ஆகிய ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இத்தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.