

திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற கஜமுக சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சதுர்த்தி விழா செப்டம்பர் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
கஜமுக சூரசம்ஹாரத்தையொட்டி, இன்று மாலை திருநாள் மண்டபத்தில் வெள்ளி யானை வாகனத்தில் வாள், வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் விநாயகர் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, யானை தந்தத்துடன் எழுந்தருளிய விநாயகர் மேள தாளத்துடன் கிழக்கு கோபுரம் வழியாக தெப்பக்குளம் வந்தார். அங்கு யானை முகத்துடன் காணப்பட்ட சூரனை தந்தத்தால் வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
செப்டம்பர் 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். மேலும், அன்றைய தினம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை மூலவர் காட்சியளிப்பார். செப்.14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து, தீர்த்தவாரி உற்சவம், பிற்பகல் 2 மணிக்கு முக்குறுணி மோதக படையலும் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி புறப்பாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு ராமசாமி செட்டியார், அரிமளம் கண்ணன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.