

சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது அனுமதி இல்லாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விநாயகர் சதுர்த்தி வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி, நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் கலவையற்ற மூலப்பொருட்களாலும், களி மண்ணாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
வைக்கோல், உலர்ந்த மலர் கூறுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை சிலை தயாரிக்கவும், சிலை ஆபரணங்களுக்கும், பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மோகோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். வர்ணம் பூச எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகள், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பூஜைக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகளையும், பிரசாத விநியோகத்துக்கு மக்கும் தட்டுகள், கண்ணாடி கோப்பைகளையும் பயன்படுத்தலாம்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விதிமுறைகளை பின்பற்றி கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக் கூடாது. எனவே, பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.