

திருச்சி தில்லை நகரில் தனது வீடு முன்பு குவிந்த திமுகவினரை கலைந்து போகுமாறு கூறிய கே.என்.நேரு.
சென்னை/ திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின், வீடு, அலுவலகங்கள் என சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூரில் மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பான 241 ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். திருச்சி தில்லைநகரில் உள்ள நேரு வீட்டில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று காலை 7.45 மணி முதல் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் அன்பழகன், எம்எல்ஏ கதிரவன் உள்ளிட்டோர் அவரது வீட்டுக்கு வந்தனர். கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களும் ஏராளமானோர் குவிந்தனர். பிற்பகல் 3 மணி வரை சோதனை நடைபெற்றது.
கடந்த திமுக ஆட்சியின்போது திருச்சி மாநகராட்சியில் நகரப் பொறியாளராக பணியாற்றிய சிவபாதத்தின் (தற்போது திருவண்ணாமலை மாநகராட்சியில் பணியாற்றுகிறார்) புத்தூர் குமரன் நகர் வீடு, நேருவின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய மணிகண்டனின் (தஞ்சை மாநகராட்சியில் உதவி ஆணையராக உள்ளார்) திருவானைக்காவல் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்ற கே.என்.நேருவின் வீடு.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நேருவின் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான தனியார் நிறுவன தலைமை அலுவலகம், வீட்டிலும் சோதனை நடந்தது. வீட்டில் இருந்த ரவிச்சந்திரன், அவரது மனைவியிடம், கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ஆழ்வார்பேட்டையில் நேருவின் மற்றொரு சகோதரர் கே.என்.மணிவண்ணன் மற்றும் குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவையில் சிங்காநல்லூர் - ராமநாதபுரம் வழித்தடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கே.என். மணிவண்ணனின் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கோவை உட்பட பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற பெண் அதிகாரி சசிபிரியாவின் வீடு சுங்கம் அடுத்த சிவராம் நகரில் உள்ளது. இங்கும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல்நிலை ஒப்பந்ததாரர் வேலுமணியின் வீடு, திருப்பூர் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. காங்கேயம் சேரன் நகரிலும் ஒருவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகம், ஈரோடு பழையபாளையத்தில் உள்ள அதன் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அந்த வகையில், சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூரில் மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பான 241 ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வழக்கின் புலன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
சோதனை ஏன்? - நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் கட்டுமான நிறுவனம் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், பணப் பரிமாற்றங்களில் முறைகேடு நடந்ததாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருமான வரித் துறை ஏற்கெனவே சோதனை நடத்தியது. அத்துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, நேரு, அவரது மகன் மற்றும் அவரது சகோதரர்களான மறைந்த தொழிலதிபர் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணனுக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 2025 ஏப்ரலில் சோதனை நடத்தியது.
இதில் கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில், டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடந்த 2025 அக்டோபரில் விரிவான கடிதம் அனுப்பியது. ‘நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் சுமார் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளது. டெண்டர்களில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. பணத்தை நேரடியாக மட்டுமின்றி, கட்சி நிதியாகவும் வசூலித்துள்ளனர்’ என்று தெரிவித்த அமலாக்கத் துறை, இதுதொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்கள், ஹவாலா பரிவர்த்தனை விவரங்களை டிஜிபியிடம் சமர்ப்பித்தது.
ரூ1,020 கோடி முறைகேடு: ரூ1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கடந்த திமுக ஆட்சியின்போதே அமலாக்கத் துறை தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இதற்கிடையே, நேரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, நேரு மீது விசாரணை நடத்த டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், மோசடி, நம்பிக்கை துரோகம், கூட்டுச் சதி உட்பட பல்வேறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்ததன் தொடர்ச்சியாக, நேற்று சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.