தேனி - வருசநாடு அருகே குடிநீர் பிரச்சினை: காலி குடங்களுடன் மக்கள் மறியல்

தங்கம்மாள்புரத்தில் குடிநீர் பிரச்சினையை சரி செய்யக் கோரி தேனி - வருசநாடு செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தங்கம்மாள்புரத்தில் குடிநீர் பிரச்சினையை சரி செய்யக் கோரி தேனி - வருசநாடு செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated on
1 min read

வருசநாடு: மூலவைகை உருவாகும் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. இப்பிரச்சினையை சரிசெய்ய கோரி வருசநாடு அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி வட்டம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூலவைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆறு வறண்டதால் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து நீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. இதனால் 2 வாரங்களுக்கு மேல் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலையில் (செப்.16) வருசநாடு - தேனி சாலையில் இக்கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கடமலைக்குண்டு காவல் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, “ஆறு வறண்டதால் தற்போது நீர்வரத்து குறைந்தது. கடைகள், வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வரும் குறைவான நீரும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதில்லை. குடிநீர் திறந்து விடும் பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுகின்றனர்” என்று குற்றம்சாட்டினர்.

விரைவில் சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>தங்கம்மாள்புரத்தில் குடிநீர் பிரச்சினையை சரி செய்யக் கோரி தேனி - வருசநாடு செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.</p></div>
“தனியார் கல்லூரியில் பயிலும் பிசி, எம்பிசி மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்குக” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in