

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய தர்கா நிர்வாகிகள் செல்ல அனுமதி அளித்த போலீஸாரை கண்டித்து அப்பகுதி கிராமப் பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே மலைக்குச் செல்லும் பாதை இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நாளை (டிச. 21) நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சிக்கந்தர் தர்காவுக்கு சென்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு தர்காவைச் சேர்ந்த நிர்வாகிகள் 4 பேர் சென்றனர். அவர்களுக்காக மலைக்குச் செல்லும் பாதையில் இருந்த இரும்பு தடுப்புகளை போலீஸார் அகற்றினர்.
இதற்கு பழனியாண்டவர் கோயில் அடிவாரத்திலுள்ள கோட்டைத்தெருவைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் கிராமப் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். கோட்டைத் தெருவிலுள்ள கிராம மக்களை மலை மீது செல்ல அனுமதிக்காதபோது, தர்கா நிர்வாகிகளை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்பினர். போலீஸார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் உதவி ஆணையர் சசிபிரியா, கிராமப் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றார். அதை ஏற்காத கிராம பெண்கள், தர்காவுக்கு செல்ல நிர்வாகிகளை அனுமதிப்பதுபோல், மலை உச்சியிலுள்ள கல்லத்தி மரத்துக்கு செல்ல எங்களையும் அனுமதியுங்கள். இல்லையென்றால் மலைக்குச் செல்லும் பாதையை மறைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
பின்னர், கிராமப் பொதுமக்கள் சார்பில் காவல்துறை உதவி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், மலையிலுள்ள கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகத்தினர் அவர்களது பிறைக் கொடியை ஏற்ற முயற்சிக்கின்றனர். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். கல்லத்தி மரத்தை பாதுகாக்க எங்களையும் மலை மீது அனுமதிக்க வேண்டும். இல்லையேல் யாரையும் மலைமேல் செல்ல அனுமதிக்கக் கூடாது என கோரியுள்ளனர்.
நாளை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதால் திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.