

சென்னை: சிறையில் அடித்து கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில், சாமிதோப்பு பகுதியில் ஈத்தாங்காட்டைச் சேர்ந்த சபரிவர்மன் தனது வாழ் வாதாரத்துக்காக சிறுபெட்டிக் கடை நடத்தி வந்த ஏழை வணிகர்.
அற்ப காரணத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, சிறைக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். சிறைத் துறையால் சபரிவர்மன் கொலை செய்யப்பட்டிருப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. லஞ்சம், போதைப்பொருள் ஒழிப்பில் இப்பேரமைப்பு அரசுக்கு ஆதரவாக இருக்கும்.
சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவர்மன் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.1 கோடி அறிவிக்க வேண்டும். படித்து பட்டம் பெற்ற அவரது மனைவிக்கு அரசுத் துறையில் தகுதியான வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “மாற்றுத் திறனாளியான சபரிவர்மன் சந்தேகத்துக்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார். அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தன. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து சிபிஐ விராணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.