

புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்றும், திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமியுடனான ஆலோசனைக்குப் பின்னர் டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி ரோடு ஷோ நடத்த தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு கடந்த வாரம் புதுச்சேரி தவெக நிர்வாகிகள், டிஜிபியிடம் மனு அளித்தனர்.
இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அரசு தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, தலைமை செயலர், டிஜிபி ஆகியோருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நேற்று புதுச்சேரி ஐஜி அஜித்குமார் சிங்கலாவை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டார். அதற்கு ஐஜி அஜித்குமார் சிங்கலா, டிஜிபி ஷாலினி சிங் புதுச்சேரியில் இல்லை என்றும், அவர் வந்தவுடன் வருமாறும் கூறி அனுப்பியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோர் சீனியர் எஸ்பி கலைவாணனை சந்தித்து ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்பதற்காக உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் எஸ்பி அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு சீனியர் எஸ்பி இல்லாததால் அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுபற்றி புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது, அவர் பதில் எதுவும் அளிக்காமல் சென்றார். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா இருவரும் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க கேட்டு கோரிக்கை வைத்தனர்.
இதன் பின்னர் மாலையில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி, ஐஜி அஜித்குமார் சிங்கலா, டிஜஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் தவெகவைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என காவல் துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் வெளியே சென்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டிஐஜி சத்தியசுந்தரம் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை. திறந்தவெளியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடத்தையும், தேதியையும அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.