

தோப்பு வெங்கடாசலம்
ஈரோடு: உட்கட்சி பூசலால் தான் திமுக ஆட்சியை இழந்தது என அக்கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அமைச்சராக இருந்த காலத்தில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், அத்திக்கடவு- அவிநாசி திட்டம், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற குடிநீர் திட்டங்களை கொண்டு வந்து மக்களின் பல ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளேன்.
நீர் நிரம்பிய காலத்திலேயே இத்திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் திமுகவுக்கு கூடுதலாக வாக்குகள் கிடைத்திருக்கும். ஆனால் மாவட்ட செயலாளர் சொல்வதை எந்த அதிகாரிகளும் பொருட்படுத்துவதில்லை. தற்போதைய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் விவசாயிகள் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். ஓரிரு வாரங்களிலேயே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு யார் காரணம் என்பதை திமுக தலைமை ஆராய வேண்டும். திமுக என் மீது எடுத்த நடவடிக்கை ஒரு வார காலத்தில் ஆராய்ந்து தலைமை உரிய பதில் தர வேண்டும். வேறு கட்சிக்கு செல்லும் எண்ணமோ, மீண்டும் அதிமுகவுக்குச் செல்லும் எண்ணமோ எனக்கு இல்லை. இருக்கும் இடத்துக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். விஜய் அலை என்பதால் திமுக தோற்றது என்பதில் உண்மையில்லை. உட்கட்சி பூசலால்தான் திமுக ஆட்சியை இழந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி நினைத்திருந்தால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நிர்வாகிகளை அழைத்து பேசி இருந்தால் உட்கட்சி பூசல்களை தீர்த்து வைத்து இருக்கலாம். இது நடந்திருந்தால் திமுக 8 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை பெற்றிருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.