

பிரதமர் மோடி
மைசூர்: “உலகளவில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் முதன்மைப் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. இதற்கு இந்தியாவின் இளைஞர் சக்தியே முக்கியக் காரணமாகும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் அமைக்கப்பட்ட ‘விவேக ஸ்மாரகா’ பண்பாட்டு மையத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: "இன்றைக்கு உலகளவில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் முதன்மைப் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. இதற்கு இந்தியாவின் இளைஞர் சக்தியே முக்கியக் காரணமாகும். சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டியது போல, நாட்டின் உயர்விற்கு வழிகாட்டும் கல்வியும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் மிகவும் அவசியமானவை. கல்வி மற்றும் வாய்ப்புகளில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே தற்போதைய நாட்டின் முதன்மைத் தொலைநோக்குப் பார்வையாக மாறியுள்ளது.
பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நுழைவது முதல், தாய்மொழியிலேயே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைப் பயிலும் வசதிகள் வரை உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொழி அடிப்படையிலான பாகுபாடுகள் களையப்பட்டு வருகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையானது 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள நமது இளைஞர்களைத் தயார்படுத்தும் வாகனமாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 823 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 1,40,000 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள் என இந்தியாவின் அடிப்படைக் கல்வி உள்கட்டமைப்பு பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், ஸ்டார்ட்அப், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறையில் விக்ரம்-1 ஏவுகணையை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் போன்ற இளைஞர்களின் சாதனைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கின்றன.
விளையாட்டுத் துறையிலும் கேலோ இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற திறமைகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. 'ஜன சேவை - ஜனார்த்தன சேவை' என்ற கோட்பாட்டின்படி, தாய்நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டு இளைஞர்கள் செயல்பட வேண்டும். இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. முறையான வழிகாட்டுதலும் வாய்ப்புகளும் கிடைக்கும் போது இளைஞர்களின் திறமை நாட்டின் பலமாக மாறுகிறது" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.