“தவெக மகளிரை அச்சுறுத்தும் ஆளும் கட்சியினர்...” - விஜய் குற்றச்சாட்டு

விஜய்

விஜய்

Updated on
1 min read

சென்னை: “மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்” என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சி ஸ்டிக்கரைச் சிலர் ஒட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் உள்ள இன்னொரு சகோதரியையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் காணொலி பரவி வருகிறது. மகளிர் மீதான இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி, வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர்.

வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகப் போக்கைக் காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>விஜய் </p></div>
“ஓரிரு நாளில் நேரில் வருகிறேன்...” - மருத்துவமனையில் இருந்தபடி வானதி வீடியோ பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in