

மருத்துவமனையில் வானதி சீனிவாசன்
சென்னை: “தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், தமிழகத்தின் ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் வெற்றி மூலம் அன்பை தெரிவிக்க வேண்டும்” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் தனது எக்ஸ் தளத்தில், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி. இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.
உங்கள் பிரார்த்தனையே என் வலிமை. உங்கள் நம்பிக்கையே என் மருந்து. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன். மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம். இந்த தேர்தலில் நம் வெற்றி நிச்சயம் வெற்றி நமதே” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது எக்ஸ் தள வீடியோ பதிவில், “அன்பு சகோதர, சகோதரிகளே உங்களின் அன்பினாலும், பிராத்தனையினாலும் உடல் நலம் தேறி கொண்டிருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். நமது தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எனக்காக கோவை வடக்கு தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவின் பூத் காரியகர்த்தகர்களுடன் உரையாட இருக்கிறார். எனது பூத் வலிமையான பூத் என்கிற கலந்துரையாடலில் நாம் அனைவரும் 'நமோ ஆஃப்' மூலம் இணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், தமிழகத்தின் ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் வெற்றி மூலம் அன்பினை தெரிவிக்க வேண்டும். நாம் அனைவரும் பிரதமர் மோடி பேசுவதை கேட்க காத்திருப்போம்” என்று அவர் கூறினார்.