

கடலூர்: “விஜய் ஆதரவாளர்கள் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் அதிமுக கூட்டணிக்கு செலுத்துங்கள். அப்போதுதான் திமுக ஆட்சி அகற்றப்படும்” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் கொண்டுவருவதாக மத்திய அரசு சொல்லவே இல்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை தொகுதிகள் எண்ணிக்கைக்காக பயன்படுத்தவில்லை, மகளிர் இட ஒதுக்கீட்டை எப்படி கொண்டுவருவது, எந்த தொகுதிகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது என்ற விஷயங்களுக்காகவே கணக்கில் எடுத்துள்ளனர். ஆனால் இவற்றைப் பற்றி கவலைப்படாமல் திமுக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழக பெண்கள் திமுகவை வீழ்த்தப் போகிறார்கள் என்பதே உண்மை.
முதல்வர் ஸ்டாலின் முதலில் தனது 5 ஆண்டு கால திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டார், அது மக்களிடம் எடுபடவில்லை. அதனால், இப்போது என்னையும், இபிஎஸ்சையும் பற்றி தனிநபர் அவதூறு பரப்புகிறார். தனது 5 ஆண்டுகால அரசில் செய்த சாதனைகள் மீது நம்பிக்கை இல்லாததால், ரூ.8 ஆயிரம் டோக்கனை நம்புகிறார் ஸ்டாலின்.
விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவை வீழ்த்தவும், திமுக அரசை வீழ்த்தவும் தான். இப்போது பிரேமலதா திமுக அணியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் அவர் அங்கிருந்து கொண்டே எங்களுக்கு தான் வேலை செய்கிறார். முதல்வரை வைத்துக் கொண்டே எங்கும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது, போதைப்பொருள் விற்கிறார்கள் என்று பிரேமலதா பேசுகிறார்.
விஜய் கட்சி தொடங்கிய காரணமே திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றுதான். எங்கள் நோக்கமும் திமுக ஆட்சியை அகற்றுவதுதான். விஜய் இந்த தேர்தலில் ஓரளவு வாக்குகள் பெறுவார். ஆனால் வெற்றிபெற முடியாது.
எனக்கு 2016-ல் இதுபோலவே நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், கடைசியில் மக்கள் அதிமுகவுக்கு வாக்குகள் செலுத்தினர். அதே சூழல்தான் இப்போதும் உள்ளது. விஜய் ரசிகர்கள் எப்படியும் விஜய்க்கே வாக்களிப்பார்கள். ஆனால், விஜய் ஆதரவாளர்கள் அவர்களது வாக்குகளை வீணடிக்காமல் அதிமுக கூட்டணிக்கு செலுத்துங்கள். அப்போதுதான் திமுக ஆட்சி அகற்றப்படும். உங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள்” என்று கூறினார்.