

நடிகர் விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு தொடர்பாக ஏப் 20-ம் தேதி நடைபெறும் விசாரணையில், ஆன்லைன் மூலம் ஆஜராக நீதிமன்றத்தில், விஜய் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் - மனைவி சங்கீதா விவகாரத்து கோரி பிப்.24ம் தேதி செங்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சங்கீதா தொடர்ந்த இந்த வழக்கில் ஏப். 20ல் நேரில் ஆஜராக வேண்டும் என விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்று சங்கீதா நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள தங்களுக்குச் சொந்தமான இல்லத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று சங்கீதா நீதி மன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் விசாரிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி விஜய் தரப்பில், ஆன்லைன் மூலம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தல் பணி இருப்பதாலும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதாலும் திங்கள் கிழமை நடக்கும் வழக்கில் ஆன்லைன் மூலம் ஆஜராவதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.