

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தவெக-வின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விஜய் வழங்க விவசாயி நாராயணன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற எஸ்பி, மீனவர் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் விஜய் பேசியதாவது: திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று அதிகாரங்களும் அரசியலுக்கும் ஆட்சி அதிகாரத்துக்கும் மிகவும் முக்கியம். நம்முடைய தேர்தல் அறிக்கை நேர்மையான உத்தரவாதம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம்.
பலர் மாதிரி அள்ளிவிடும் அவசர அறிக்கையும் இல்லை. திமுகவும் மற்றும் பலரும் ஒன்றுதான் என ஏற்கெனவே சொன்னோம். ஒருவர் 10 ஆயிரம் கொடுத்தால் இன்னொருவர் 8 ஆயிரத்துக்கு கூப்பன் தருகிறார். ஒருவர் குளிர்சாதனப் பெட்டி கொடுத்தால் இன்னொருவர் அதை வாங்க கூப்பன் கொடுக்கிறார். இப்படி இருவரும் ஒரு தேர்தல் அறிக்கையை பெயரை மாற்றி கலரை மாற்றி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வேறுவேறு இல்லை.
மகளிர் மேம்பாடு திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கத்துடன் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், மாணவர்களின் அம்மாக்களுக்கு 15,000 கல்வி உதவித்தொகை, மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இளைஞர் முன்னேற்றம் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப், 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும்.
உலகத்தரக் கல்வி திட்டத்தின் கீழ் உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ. 20 லட்சம் வரை உயர்கல்விக் கடன், நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், AI மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள், விவசாயிகள் நலன் திட்டத்தின் கீழ் நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, 5 லட்சம் சோலார் பம்புகள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, 100% பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.
சுகாதாரமான தமிழ்நாடு திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு, நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை, ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை, போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உருவாக்கப்படும். மீன்படி தடைக்கால நிவாரணம் ரூ.27,000, மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு, மீனவர்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்படும்.
முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம். 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா வழங்கப்படும்.
வேட்பாளர்களும் நானும் வேறில்லை. மே 4 ஆம் தேதி புதிய ஒளி கிடைக்க வேண்டும். பெண்கள், உங்கள் வீட்டு வாசலில் விசிலை கோலமாகப் போடுங்கள். தமிழ்நாட்டுக்கு என்னவாக இருந்தாலும் என் தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ-தானே. பெரம்பூருக்கும் திருச்சி கிழக்கிற்கும் மாதம் ஒரு முறை கட்டாயம் வருவேன். நீங்கள் என்னைச் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.