

விஜய் எனது அரசியல் எதிரி அல்ல, அவருக்கு தற்போது எந்த அரசியல் அறிவுரையும் தேவைப்படும் நிலையில் அவர் இல்லை என்றும் கமல்ஹாசன் எம்.பி.தெரிவித்தார்.
கேரளாவில் நடைபெற்ற ஹோர்டஸ் ஆர்ட் அண்ட் லிடரேச்சர் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் நடைபெற்ற நேர்காணலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்விகளுக்கு பதிலளித்தார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உங்களது முக்கிய அரசியல் எதிரி யார்? என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “எனக்கு எதிரியாகத் தோன்றுவது தனிநபர்கள் அல்ல, சாதிவெறி போன்ற ஆழமான அமைப்பு சார்ந்த பிரச்சினைகளே. சாதிவெறியை கொல்ல வேண்டும். என் எதிரி பெரியவன். அவனை ‘கில்’ என்று சொல்வதற்குக் காரணம், சாதிவெறி என்பது மிகவும் வன்முறையானது. அதை தீவிரமாகவும் விரைவாகவும் எதிர்கொள்ள வேண்டும்,” என்றார்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை, ஒரே வாக்கு வங்கியை குறிவைத்து போட்டியிடுகின்றனவா? என்ற கேள்வியை அவர் நிராகரித்தார்.
அது தேவையற்ற ஒப்பீடாக இருப்பதாக கூறினார். விஜய்க்கு அரசியல் வழிகாட்டுதல் வழங்குவீர்களா? என கேட்டபோதும் அவர் மறுத்தார். “நான் அறிவுரை கொடுக்க வேண்டிய நிலைமையில் அவர் இல்லை. எனக்கு சரியான நேரத்தில் யாரும் அறிவுரை கொடுக்கவில்லை. என் சகோதரனுக்கு இப்போது அறிவுரை கொடுக்க வேண்டிய நேரம் இது அல்ல. அனுபவமே மிகச் சிறந்த ஆசிரியர்,” என்றார்.