

கோவையில் இருந்து நேற்று மாலை விமானத்தில் சென்னை வந்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் தெளிவான ஒரு முடிவை எடுத்துதான் தவெகவில் இணைந்திருக்கிறேன். மற்றவருடைய கருத்துக்களைக் கேட்டு, நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. டெல்லி சொல்லி தான், நான் தவெகவில் இணைந்திருக்கிறேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது.
கட்சிக்கு விரோதமாக நான் பல ஆண்டுகள் செயல்பட்டதாக, பழனிசாமிக்கு வேண்டுமானால் தோன்றியிருக்கலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை. ஒருவர் இயக்கத்தில் இருந்து பிரிந்த பிறகு, அவரைப் பற்றி பேசுவது சரியல்ல. அவர் அதை கடைபிடிக்க வேண்டும். வேண்டுமென்றே ஒரு காரணத்தைச் சொல்லி, என்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பது, அவருடைய ஆசை. அந்த ஆசை கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. அது அவருக்கு வெற்றியாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை, எனது அரசியல் பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ‘‘பழனிசாமி என்னை விமர்சித்திருக்கிறார். அவருக்கு நான் பதில் சொல்லும் அளவுக்கு அவர் பெரிய தலைவரே அல்ல. யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். நான் தெளிவாக இருக்கிறேன். தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்’’ என்றார்.