திருச்சியில் சாலை வலத்தின் இடையே விஜய் மும்மத வழிபாடு: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்

திருச்சியில் விஜய்

திருச்சியில் விஜய்

படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

Updated on
2 min read

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று 2-ம் கட்டமாக சாலை வலம் வந்து வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வின் இடையே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்து வாக்கு சேகரித்தார்.

 திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஏப்.2 அன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை பகுதியில் முதல் கட்ட பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து காந்தி மார்க்கெட், தஞ்சாவூர் ரோடு, பழைய பால்பண்ணை, செந்தண்ணீர்புரம், டி.வி.எஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு, விமான நிலையம் பகுதிகளில் சாலை வலம் வந்து பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் தான் போட்டியிடும் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை பகுதி, கொட்டப்பட்டு பகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இதற்காக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது, திருச்சி விமான நிலையத்தில் போலீஸார் அமைத்திருந்த தடுப்புகள் மீது ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்ற தொண்டர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேக பிரச்சார வேனில் ஏறி வெளியே வந்த விஜய், வேன் மீது நின்றபடி விசில் அடித்து, கையசைத்து வாக்கு சேகரித்தார். தொண்டர்கள் கொடுத்த வெள்ளை புறாக்களை கைகளில் ஏந்தி வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தார்.

 வயர்லெஸ் சாலையில் சாலை வலம் சென்றபோது அங்குள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குச் சென்று தரையில் முட்டிபோட்டபடி சிறிது தூரம் நடந்து சென்று ஜெபம் செய்தார்.

பின்னர், வேனில் ஏறி சாலை வலம் சென்று விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது வேனில் முன்னாள் அமைச்சரும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணனை ஏற்றிக் கொண்டு வாக்கு சேகரித்தார்.

வழிநெடுக மக்கள் கூட்டம், கூட்டமாக கூடி நின்று விஜய்யை வரவேற்று, துண்டு, பொன்னாடை, புகைப்படம், கிரிக்கெட் பேட் உள்பட பல்வேறு பொருட்களை நினைவு பரிசாக வழங்கினர். சில இடங்களில் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களின் விஜய்யின் வேனை பின் தொடர போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் தொண்டர்கள் வேனை பின் தொடர்ந்து ஓடி வந்தனர்.

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு அருகே உள்ள ஸ்ரீ பச்சநாச்சியம்மன் கோயிலில் தரையில் சாஸ்டாங்கமாக படுத்து சாமி கும்பிட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சாபில் பூ, பழம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்கு சென்று அதன் தலைவர் மோத்தி ஹாஜியாரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு வாக்கு சேகரித்தார். பள்ளிவாசல் தலைவர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் சாலை வளம் வந்த விஜய் எங்கும் பேசவில்லை. கிழக்கு தொகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் சாலை வளம் வந்து தனது வாக்கு சேகரிப்பு பணியை முடித்துக் கொண்டு மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து வந்த தவெக தலைவர் விஜய்க்கு, திருச்சி கிழக்குத் தொகுதி பொறுப்பாளர் குடமுருட்டி டி.கரிகாலன் 900 விசில்களால் செய்த மாலையை அணிவித்தார். வெற்றி பெற்றதும் இதை விட பெரிய மாலை அணிவிப்பதாக கரிகாலன் கூறியதை கேட்ட விஜய், மைன்ட்ல வச்சுக்கிறேன் என்றார்.

தவெகவினர், விஜய் பேசுவதற்காக 6 இடங்களை குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தனர். வயர்லஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், தந்தை பெரியார் கல்லூரி அருகே காஜாமலை சாலை சந்திப்புப் பகுதி ஆகிய 3 இடங்களில் பேச போலீஸார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் சாலை வலம் வந்த விஜய், எங்கும் பேசவில்லை. இதனால் தவெகவினர் ஏமாற்றமடைந்தனர். கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே கிரேன் மூலம் பிரம்மாண்ட  மாலை அணிவித்தனர்.

விஜய் வருகையை முன்னிட்டு கோழிபண்ணை சாலை, காஜாமலை வளாகம் ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலையில் பல பகுதிகளில் இரும்பு தடுப்புகள் கொண்டு போலீஸார் தடுத்திருந்தனர். இதனால் தவெகவினர் ஆங்காங்கே வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள், பெண்கள் பலரும் தலைக்கவசம் அணியாமலும், ஒரு இருசக்கர வாகனத்தில் 3, 4 பேர் வரை விதிகளை மதிக்காமல் பயணித்தனர். மேலும் சாலையில் வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக இயக்கினர்.

<div class="paragraphs"><p>திருச்சியில் விஜய்</p></div>
“அதிமுக ஆட்சி அமைந்ததும் நாமக்கல் ‘கிட்னி’ திருட்டு குறித்து விசாரணை, நடவடிக்கை உறுதி” - இபிஎஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in