

பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்
கோவை: “விஜய் ஓர் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்,” என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவராக இருந்த சசி தரூரின் இடத்தில் இப்போது பிரவீன் சக்கரவர்த்தி இருக்கிறார். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர். இவர் விஜய்யை சந்தித்தது இன்றுவரை சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி, “தவெக தலைவர் விஜய்யை நான் சந்தித்தது உண்மை என ஏற்கெனவே கூறிவிட்டேன். அவருடன் என்ன பேசினேன் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.
எனது அடையாளம் காங்கிரஸ் கட்சி மட்டுமே அல்ல. நான் ஒரு தனிநபராக விஜய்யை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் டெல்லியில் பலரை சந்திக்கிறேன். அப்படித்தான், விஜய்யை சந்தித்தேன். ஆனால், தமிழகத்தில் தான் அதை கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.
விஜய் கூட்டத்துக்கு மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். விஜய்யை மக்கள் நடிகராக மட்டுமே பார்க்கவில்லை. அவரை ஓர் அரசியல்வாதியாக பார்க்கிறார்கள். அதை யாராலும் மறுக்க முடியாது. விஜய் ஓர் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்.” என்றார்.
3 கோரிக்கைகள்: தொடர்ந்து அவரிடம் ஆட்சியில் பங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காகவே, அதிக சீட், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் எதிர்காலத்துக்காக வைக்கப்படும் கோரிக்கை. மற்றபடி, ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா, இல்லையா என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஜனநாயகம் நிறைந்த கட்சி. காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கோரிக்கைகளை சுதந்திரமாக முன்வைக்கலாம். ஆனால், கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும்.” என்றார்.
ஏற்கெனவே, தமிழக கடன் நிலவரத்தை உ.பி.யுடன் ஒப்பிட்டுப் பேசி பிரவீன் சக்கரவர்த்தி சர்ச்சையைக் கிளப்பினார். அவரது இக்கருத்து குறித்து தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய் சந்திப்பு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்களைக் கிளப்பியுள்ளார்.
ஏற்கெனவே மாணிக்கம் தாகூர் பதிவிட்ட ட்வீட்டால் எழுந்த சர்ச்சைகள் தீர்வதற்குள் பிரவீன் சக்கரவர்த்தி மற்றொரு சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.