

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள்.
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி வருகையை தவெக தலைவர் விஜய் திடீரென ரத்து செய்ததால், அவரை பார்ப்பதற்காக விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிகளவில் தொண்டர்கள் குவிந்ததால் ஆலய திருப்பலிக்கு இடையூறு ஏற்பட்டது.
தவெக தலைவர் விஜய் நேற்று வேளாங்கண்ணிக்கும் நாகூர் தர்காவுக்கும் வரவுள்ளதாக தகவல் வெளியானது.இதையடுத்து, வேளாங்கண்ணி பேராலய முகப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். பேராலய முகப்பில் வர்ணம் பூசுவதற்காக கட்டப்பட்டிருந்த சாரத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். அவர்களை பாதுகாவலர்கள் கீழே இறங்கச் சொல்லியும் இறங்க மறுத்துவிட்டனர்.
பின்னர், அதிகாலை 5 மணிக்கு பேராலய கதவுகள் திறந்தவுடன் அனைவரும் உள்ளே புகுந்தனர். அதிகாலை 5.40 மணி முதல் திருப்பலி தொடங்கிய நிலையில், அங்கிருந்த அவரது ரசிகர்களும், தொண்டர்களும் முழக்கமிட்டபடியே இருந்தனர். இதனால், திருப்பலி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, வழிபாட்டுக்கு இடையூறு இன்றி அமைதி காக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் பேராலய உதவி பங்குத் தந்தை ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
இதனிடையே, விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் பேராலயத்திலிருந்து வெளியேறினர். இதேபோல, நாகூர் தர்காவிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திரண்டிருந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதனிடையே தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்திலும், அதைத் தொடர்ந்து நாகூர் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தவெக தலைமையில் ஆட்சி அமையும். தவெக தலைவர் விஜய் கண்டிப்பாக முதல்வராக பதவியேற்பார்” என தெரிவித்தார்.