

திருச்சி கிழக்கு தொகுதியில் வயர்லெஸ் சாலை புனித அந்தோணியார் ஆலயத்தில் விஜய் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கொட்டப்பட்டு பகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்று நேற்று வாக்குசேகரித்தார்.
விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேக பிரச்சார வேனில் ஏறி வெளியே வந்த விஜய், வேன் மீது நின்றபடி விசில்அடித்து, கையசைத்து வாக்கு சேகரித்தார். வயர்லெஸ் சாலையில் சாலை வலம் சென்றபோது, அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்குச் சென்று தரையில் மண்டியிட்டு சிறிது தொலைவு சென்று ஜெபம் செய்தார்.
பின்னர், வேனில் ஏறி சாலை வலம் சென்ற விஜய், வேனில் முன்னாள் அமைச்சரும் லால்குடி தொகுதி தவெக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணனை ஏற்றிக் கொண்டு வாக்கு சேகரித்தார். கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்குச் சென்று அதன் தலைவர் மோத்தி ஹாஜியாரை சந்தித்து, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திருச்சி- புதுக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு அருகே உள்ள பச்சநாச்சியம்மன் கோயிலில் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் விபூதி, குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.திருச்சி கிழக்கு தொகுதியில் ஒன்றரை மணிநேரம் சாலை வலம் வந்த விஜய் எங்கும் பேசவில்லை.
எடப்பாடி தொகுதியில் சுயேட்சைக்கு ஆதரவு: சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் அருண்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக போட்டியிடாத சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிரேம்குமார் முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான்.
எடப்பாடி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான கூ.பிரேம்குமாரையும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தவெக சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.பிரேம்குமாருக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.