

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று 2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இதற்காக தனி விமானத்தில் நேற்றே அவர் டெல்லி சென்றார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், கடந்த 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமைஅலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். அவர் அளித்த பதில்களை எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவாகவும் அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனர்.
விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தகவல் வெளியானது. விஜய்யின் வேண்டுகோளை ஏற்று, பொங்கல்பண்டிகை முடிந்து மீண்டும்விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில், ஜன.19-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.இதை ஏற்று, நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிபிஐ அலுவலகத்தில் அவர் இன்று காலை ஆஜராகிறார். அவரிடம் கேட்கஉள்ள கேள்விகள் பட்டியலை அதிகாரிகள் தயாராகவைத்துள்ளனர். விசாரணைமுடிந்து இன்று இரவு சென்னை திரும்ப விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கரூர் சம்பவத்தின்போது சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் 2-வது முறையாக இன்றும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. விஜய்யின் ஆலோசகரும், கட்சியின் வியூக வகுப்பாளருமான ஜான் ஆரோக்கிய சாமிக்கும் சம்மன் அனுப்பிவிசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படு கிறது.