

மதுரையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி.
மதுரை: தேனி அருகே நடந்த விபத்து சம்பவத்தை கர்நாடக பக்தர்கள் மீதான தாக்குதலாக திரித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன், கார்களில் கடந்த 12-ம் தேதி சபரிமலைக்குச் சென்றனர். தேனி அருகே திண்டுக்கல்-தேனி புறவழிச்சாலையில் சென்றபோது, அவர்களது வேன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் வேனின் பின்பகுதியில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர் மற்றும் பக்தர்கள் குழுவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சிலர் லாரி ஓட்டுநருக்கு ஆதரவாக வந்தனர். தகவலறிந்த தேனி போலீஸார் அங்கு வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கர்நாடக பக்தர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதுகுறித்து அறிந்த தேனி காவல் கண்காணிப்பாளர் சினேகப்பிரியா, விபத்து மற்றும் போலீஸ் நடவடிக்கை குறித்து விளக்கி, சாம்ராஜ் நகர் காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினார்.
தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட நபர்களை காவல் நிலையம் வந்து புகார் அளிக்குமாறு தேனி போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், இரு தரப்பும் பேசி சமரசம் ஏற்பட்டு, வேன் கண்ணாடியை சரி செய்ய லாரி ஓட்டுநர் ரூ.1,000 கொடுத்துள்ளார். பின்னர் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். எனினும், விபத்து குறித்து அல்லிநகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் தரப்பைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
ஆனால், இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் சிலர் தவறான தகவலை பரப்ப முயற்சிக்கின்றனர். விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்போ, பெரிய சேதமும் இல்லை. இரு தரப்பினரும் மொழி புரியாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடப்பட்டது குறித்து கர்நாடக போலீஸாரும் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். திண்டுக்கல் டிஐஜி சுவாமிநாதன், தேனி எஸ்.பி. சினேகபிரியா, மதுரை எஸ்.பி. அரவிந்த் உடனிருந்தனர்.