

கொட்டிவாக்கம்: சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 42-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: காமராஜர் தனக்கென எதையும் சேர்த்து வைக்காமல், மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட்டவர். அவரது ஆட்சிக்காலச் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது.
கல்வி அழியாத செல்வம். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறச் செய்வது மட்டுமே பள்ளிகளின் கடமையல்ல; நல்ல பண்பும் மனித நேயமும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழ் மொழியும், தமிழினமும், கலாச்சாரமும் காக்கப்பட வேண்டுமானால் பாரத தேசமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
திருச்செந்தூருக்கு புதிய ரயில்: சென்னையில் இருந்து திருச்செந்தூருக்குப் புதிய ரயில்சேவை வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் நிறை‘வேறும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பள்ளியின் விளையாட்டு அரங்கம், நெல்லை நாடார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியை திறந்து வைத்தார். 1985-ம் ஆண்டு 85 மாணவர்கள், 7 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது சுமார் 3,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 200 ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். விழாவில் பள்ளித் தலைவர் ஆனந்தராஜ், தாளாளர் ஆர்.பிரபு, நிர்வாகச் செயலாளர் சந்திரசேகர பாண்டியன், பொருளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் தாமஸ் பங்கேற்றனர்.