

புது டெல்லி: இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இசையமைப்பாளர் தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். எளிய மக்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் தனது இசையிலும், கானா பாடல்களிலும் அழகாக வெளிப்படுத்தி, தனித்துவமான இசை பாணியால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் தேவா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர்.
காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும்.
அவரது மறைவு தமிழ் இசையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.