

ஐ.நா. சபை நடப்பு 2026-ம் ஆண்டை, சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்துள்ளது. பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக மாற்றுவதன் மூலம், உரம், பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர்க் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் எளிதாகும்.
இதற்காக, தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்குபவர் பயிற்சி மற்றும் இயக்குபவர் உரிமம் ஆகியவை தமிழ்நாடு பல்கலைக்கழக தொலைநிலை விமான பயிற்சி நிறுவனத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் வழங்கப்படும்.
‘வெற்றி வான்மகள்’ என்னும் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.2.50 கோடியில் ட்ரோன்களும் வழங்கப்படும்.
‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும், கிராமப்புறங்களில் வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளிலும் செடி வளர்ப்பு பைகளுடன் கூடிய தொகுப்புகள், செங்குத்து தோட்டங்கள், நீரியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்த்து, நலமான சூழலையும் ஏற்படுத்த ரூ.10 கோடியில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விவசாயிகளுக்கு விருது
சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க ‘மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறு, குறு விவசாயி விருது’ வழங்கப்படும். இதில் 3 விவசாயிகளுக்கு முறையே, ரூ.2.50 லட்சம், ரூ.1.50 லட்சம், ரூ.1 லட்சம் என மொத்தம் 30 விவசாயிகளுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் ‘வெற்றி விவசாயி விருது’ வழங்கப்படும்.
முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரம் என 90 பரிசுகள் வழங்கப்படும். உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை சிறப்பிக்க, சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான ‘நம்மாழ்வார் விருது’ 5 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதில் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
* பயறு வகைகளில் ரூ.65.28 கோடி, எண்ணெய் வித்துக்களில் ரூ.138.36 கோடி என மொத்தம் ரூ.203.64 கோடியில் மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் ‘பயறு வகைகள், உணவு எண்ணெய் வித்துக்கள் தன்னிறைவு இயக்கம்’ செயல்படுத்தப்படும்.
* காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ரூ.17.70 கோடியில் ‘வேளாண் காடுகள் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
* விவசாய நிலங்களில் கதிரடிக்கும் களம் அமைக்க ரூ.2.80 கோடி, தார்ப்பாய்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* ஆழ்துளை கிணறுகளுடன் சூரிய சக்தி மோட்டார் அமைக்க எஸ்சி, எஸ்டி விவசாயி களுக்கு சிறப்பு மானியமாக ரூ.56.72 கோடி, மற்ற விவசாயிகளுக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு.
* தஞ்சாவூரில் மாபெரும் வேளாண் இயந்திரக் கண்காட்சி நடத்தப்படும்.
* ப்ளூ பெர்ரி, ட்ராகன் ஃப்ரூட், பேசன் ஃப்ரூட், கிவி, அவகேடோ போன்ற வெளிநாட்டுப் பழங்களை தனிப் பயிர்களாகவும், ஊடுபயிர்களாகவும் 930 ஏக்கரில் பயிரிட ரூ.1.87 கோடி ஒதுக்கீடு.
* எருமை இனப்பெருக்கத்தை மேம்படுத்த ரூ.2 கோடியும், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 5,000 கால்நடைகளுக்கு பராமரிப்பு உதவியாக ரூ.2.50 கோடியும் ஒதுக்கீடு.
* ரூ.2.40 கோடியில் 59 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப் பலகைகள்.
* திருவண்ணாமலை மாவட்டம் போளூர், ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் விற்பனைக் கூடங்களில் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் துறைமுகம், விமான நிலையங்கள் அருகே 500 டன் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.