

கோவை: பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் 790 பேருந்துகளில், வெற்றிப் பயணத் திட்டம் இன்று (அக்.01) தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அனைத்து நகரப் பேருந்துகள், 80 கிலோ மீட்டர் குறுகிய தொலைவுக்குட்பட்ட புறநகரப் பேருந்துகளில் விரிவுபடுத்தி தவெக அரசின் ‘வெற்றிப் பயணத் திட்டம்’ தொடங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி, காந்தி ஜெயந்தி தினமான இன்று (அக்.02) வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இதில், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் பங்கேற்று வெற்றிப் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்து மகளிருக்கு இனிப்புகளும், கட்டணமில்லாத பயணச் சீட்டையும் வழங்கினர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், எம்.எல்.ஏ.க்கள் கனிமொழி சந்தோஷ், என்.எம்.சுகுமார், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவிதேஜா மற்றும் போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் வே.சம்பத்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகள், புறநகர் மற்றும் மலைவழிப் பேருந்துகள் 937 என மொத்தம் 2,108 பேருந்துகளில் மகளிர் பயன் பெறும் வகையில் வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 602 நகரப் பேருந்துகள் உட்பட மொத்தம் 790 பேருந்துகளில் வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்தால் பயணிக்கலாம்’’ என்றார்.