

அஸ்வத்தாமன் | கோப்புப் படம்
விழுப்புரம்: “கூட்டணியில் விசிகவை வைத்துக்கொள்வது தவெகவுக்கு மிகப்பெரிய தலைவலி” என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், விழுப்புரத்தில் இன்று (அக்.2) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் முன்னேற்றத்தின் வேகம், மக்கள் மற்றும் உலக செல்வாக்கை எதிர்கொள்ள முடியாமல் அடிப்படையற்ற வாதங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து போலியான அவதூறுகளை ராகுல் காந்தி பரப்பி வருகிறார்.
எஸ்ஐஆர் குறித்து 3 அதிகாரிகள் ஒருமனதாக முடிவெடுக்கவில்லை என கூறி அற்ப அரசியலை செய்து வருகிறார். ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி உட்பட 3 அதிகாரிகள் ஒருமனதாக எஸ்ஐஆரை செயல்படுத்தி இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி முடிக்கப்பட்டு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. நியாயமான வாக்கு பறிபோகவில்லை. இரட்டை வாக்குரிமை கொண்ட நபர்களில் ஒரு வாக்கு மட்டும் நீக்கப்பட்டுள்ளது. பிற்போக்கு அரசியலை செய்தால், மோடியின் நிழலை கூட ராகுல் காந்தியால் தொட முடியாது. மோடி சொல்வதை உலகம் உற்று நோக்கி கவனிக்கிறது.
இந்து மதத்தில் ஜாதி ரீதியாக மக்களை பிரித்து, சிறுபான்மை வாக்குகளை ஒன்று சேர்க்கும் பிரித்தாளும் அரசியலைதான் ராகுல் போன்றவர்கள் செய்கிறார்கள். மக்களை, இளைஞர்களை கவரக் கூடிய ஆக்கபூர்வமான அரசியலை செய்ய தெரியவில்லை.
பிரதமுருக்கு எதிராக அரசியல் செய்ய அறிவாற்றல் வேண்டும். பிற்போக்கு அரசியலை மக்கள் வெறுப்பதால், காங்கிரஸ் எனும் கட்சியை குப்பை காகிதம் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் கசக்கி தூக்கி வீசி வருகின்றனர். முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்ததாக கூறிய இளைஞர், கொலை செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மீது காவல்துறையினருக்கு அச்சமில்லை. மக்களை எறும்புகளாக, புழுக்களாக நசுக்கி கொண்டிருக்கிறது.
விஜய் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துள்ளன. மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. கிராமங்களில் பல மணி நேரம் மின்வெட்டு உள்ளது.
இது மக்களுக்கு பேரடியாக விழுந்துள்ளது. இதைப்பற்றி கவலைப்படாமல் தனி உலகத்தில் முதல்வர் விஜய் வாழ்கிறார். மக்களின் கஷ்டங்கள் அவருக்கு தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் பிரதிபலனுக்காக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பாளரை அழவைத்து நாடகம் நடத்துகின்றனர்.
வாய்ப்பு கிடைக்கும் இடத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தாவி விடுவார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, தமிழகம் முழுவதும் விசிகவினர் போடும் ஆட்டம் அதிகம். இதற்கு உதாரணமாக, கடலூரில் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வை கூறலாம்.
ஆளுங்கட்சியில் அங்கம் வகிப்பதால், விசிகவினர் செய்யும் கொடுமைகளை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் பார்த்து பயப்படுகின்றனர்.
தவெக அரசு வீழ போகிறது. தவெக அரசு மிகப்பெரிய அவ பெயரை சம்பாதிக்கப்போகிறது என்றால், அது விசிகவால்தான் நடைபெறும். அவர்களை கூட்டணியில் வைத்திருப்பது தவெகவுக்கு மிகப்பெரிய தலைவலி. விசிகவுக்கு வாக்கு வங்கி இல்லை. விசிகவின் வாக்குகள் தவெகவுக்கு சென்றுவிட்டது. வன்னி அரசு அமைச்சரானது திருமாவளவனும் கவலையில் உள்ளார்.
ஸ்டாலின் மிரட்டியதால், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட முடியாமல் போய்விட்டதை உணர்கிறார். போலி நம்பர் பிளேட் வாகனத்தில் பயணம் செய்த திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சினிமா நடிகராக திருமாவளவன் தன்னை நினைத்து கொண்டிருக்கிறார்.
தமிழக இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால், ஊர் ஊராக முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்கிறார். எங்கள் கூட்டணிக்கு (அதிமுக) வெற்றி வாய்ப்பு இருக்கிறது. வைகோ பேசுவதை சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம்.
வைகோவின் வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மதிப்பு இழந்த மூத்த தலைவராக உள்ளார். இந்துகளுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்துவிட்டு, மதச்சார்பற்ற அரசியல் என தவெக கூறுகிறது.
குண்டு வெடிப்பில் மக்களை கொன்ற இமாம் அலிக்கு போஸ்டர் அடிப்பதை அனுமதித்துள்ளனர். அனைத்து மக்களின் உரிமைக்காக பாஜக குரல் கொடுக்கும். மதச்சார்பற்ற கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் பாஜகதான் ஆட்சிக்கு வர வேண்டும்.
திமுகவை எதிர்த்து பாஜக போராட்டங்களை நடத்தியது. இதனால் பாஜகவினர் அதிகளவு கைது செய்யப்பட்டனர். பாஜகவை பார்த்து திமுக பயந்தது. பாஜகவின் தலைவராக இருந்தபோது அண்ணாமலை வீரமாக, ஆவேசமாக செயல்பட்டார். இப்போது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.