

சென்னை: மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையால், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் முக்கிய ஏரியான, பூண்டி ஏரியிலிருந்து வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 15-ம் தேதி மதியம் முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர், பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கடந்த 20-ம் தேதி மதியம், பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி, 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு 2,751 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம், 33.77 அடியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆரணி ஆறு அணைக்கட்டிலிருந்து நீர்வரத்து விநாடிக்கு 1,260 கனஅடியாகவும் உள்ளது.
இச்சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளதால், இன்று பகல் 12 மணியளவில் பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 200 கனஅடி என, திறக்கப்பட்டுள்ள உபரிநீரின் அளவு, மழையின்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்இருப்பு 2,823 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம் 19.05 அடியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து விநாடிக்கு 35 கனஅடியாகவும் உள்ளது.
இச்சூழலில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று பகல் 12 மணியளவில், புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மழையின்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக இந்த அளவு அதிகரிக்கப்படும் என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.