விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு - தூக்கு தண்டனைக்கு எதிரான மனு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on: 
2 min read

மதுரை: விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார்.

கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் உட்பட பல்வேறு அமைப்புகள், கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவரை மார்ச் 19-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர்.

மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை அதிகாரியான விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், சம்பவம் நிகழ்ந்த 20 நாட்களில், மார்ச் 31-ம் தேதி தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

நீதிபதி பிரீத்தா முன்பு விசாரணை நடைபெற்றது. 71 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 76 நாளில் விசாரணை முடிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்று 76வது நாளில், தர்மமுனீஸ்வரனுக்கு கொலை செய்த குற்றத்துக்காக தூக்குதண்டனையும், போக்சோ சட்டத்தின்கீழ் ஒரு தூக்கு தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்றதற்காக ஓராண்டு சிறையும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மே 26-ல் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மமுனீஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். அரசு சார்பில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, முருகேசன் அமர்வு விசாரித்தது.

அரசுத் தரப்பில், அறிவியல் பூர்வமான தடையவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தண்டனையை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. தர்மமுனீஸ்வரன் தரப்பில், மாணவி கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் தன்னை கைது செய்தாகவும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ஜாமீன் ரத்து: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தர்ம முனீஸ்வரன் எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி பாப்பா (65) என்ற மூதாட்டியிடம் நகைகளை திருடி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

அந்த வழக்கின் தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அந்த நிபந்தனை அடிப்படையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திடச் சென்ற போது தான் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

Santhanakoodu Festival
தொடர் விடுமுறை எதிரொலி - கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in