

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான பொன்னை பாலு, மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சி.குமரப்பன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர், “மனுதாரர்கள் 700 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் சிபிஐ விசாரணை தொடர்பாக அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை” என்றார். காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கணேஷ்குமார், “சாட்சிகள் மிரட்டப்பட வாய்ப்புள்ளதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.