

புதுடெல்லி/சென்னை: மேகமலை வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது மாஞ்சோலை, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மேகமலையின் பல பகுதிகள் முன்பு வனமாக இல்லை என்றும், தற்போது அவை ரிசர்வ் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நீதிபதிகள், வனம் என அறிவிக்கப்பட்டால் அது வனம்தான் என்றும், அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை என்று கூறியதோடு, வனப்பகுதியில் இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதை அரசு ஏன் ஊக்குவிக்கிறது? என கேள்வி எழுப்பியதோடு, இலவம் பஞ்சு தோட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்தனர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், இலவம் பஞ்சு தோட்டங்களை அமைத்துள்ளவர்கள் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள்தான். வெளியாட்கள் யாரும் தோட்டங்கள் அமைக்கவில்லை. மேகமலை வனப்பகுதியில் சமீப காலமாக யாருக்கும் நிலப் பட்டா வழங்கப்படவில்லை.
ஆனால் உரிய நிலப் பட்டா வைத்திருப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
அதேவேளையில், பட்டா இல்லாமல் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களிடமிருந்து அதனை மீட்க நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரமேஸ்வர் கூறுகையில், உண்மையாக வனத்தை நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாலும், மேகமலை சுற்றுவட்டாரத்தில் இலவம் பஞ்சு தோட்டம் அமைக்க அரசு ஊக்குவித்த பின்னரே அதிக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டது. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் நில உரிமை கோர அனுமதிக்கக் கூடாது.
இலவம் பஞ்சு தோட்டம் அமைத்துள்ளவர்கள் வன உரிமை சட்டத்தின் கீழ் நில உரிமை கோர அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று சுட்டிக்காட்டினார் அப்போது, தமிழக அரசு தரப்பில், வன உரிமைச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அந்தச் சட்டத்தின் கீழ் உரிமை கோர முடியாது என எவ்வாறு கூற முடியும் என்று வாதம் வைக்கப்பட்டது அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வெளியில் இருந்து வந்தவர்கள் எந்த வகையிலும் வனப்பகுதியை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.